By Village Missionary Movement
Sunday, 08-Sep-2024இன்றைய தியானம்(Tamil) 08.09.2024 (Kids Special)
சாட்சியாய் இரு
"…மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது" - மத். 5:16
ஹாய் குட்டீஸ், விளையாட்டு என்றால் உங்களுக்கு ரொம்ப பிடிக்கும் தானே ! லீவு விட்டால் போதும், உங்களை கையிலே பிடிக்கவே முடியாதல்லவா? நீங்கள் என்ன விளையாட்டு விரும்பி விளையாடுவீர்கள் என்று கேட்டால் உங்களில் அநேகர் சொல்வது கிரிக்கெட்டாகத்தான் இருக்கும். உங்களைப் போலத்தான் குமாரும் கிரிக்கெட்டில் பைத்தியமாய் இருந்தான். அதுமாத்திரம் அல்ல படிப்பிலும், ஆலயத்திற்குச் செல்வதிலும், ஜெபிப்பதிலும் அவனை மிஞ்ச ஆளில்லை.
ஒரு லீவு நாளன்று குமார் தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடச் சென்றான். சந்தோஷமாகவும், கூச்சலிட்டுக்கொண்டும் விளையாடிக் கொண்டிருக்கும்போது டமார் என்ற ஒரு பெருஞ்சத்தம்! திரும்பி பார்த்தால் இவர்கள் அடித்த பந்து பக்கத்து வீட்டு ஜன்னலில் பட்டு ஜன்னல் கண்ணாடி உடைந்து விட்டது. விளையாடிக் கொண்டிருந்த அனைவரும் குமார்தான் ஜன்னலை உடைத்தான் என்று அவன்மேல் பழியைப் போட்டு விட்டு ஓடிப்போய் விட்டார்கள். இவனோ தனியாய் அழுதுகொண்டே அந்த வீட்டை நோக்கி நடந்தான். அந்த வீட்டு வாசலில் குண்டான, உயரமான ஒருவர் நின்று கொண்டிருந்தார். இவனுக்கு அவரைப் பார்க்கவே பயமாக இருந்தது. ஆனாலும் அழுதுகொண்டே அவரிடம் சென்று,"Sorry uncle, நான்தான் உங்கள் வீட்டு ஜன்னலை உடைத்துவிட்டேன். என்னை மன்னித்து விடுங்கள் என்று கெஞ்சினான். ஜன்னலுக்கு ஆகும் செலவை என் அப்பாவிடம் சொல்லி உங்களுக்கு கொடுத்து விடுகிறேன்" என்றான். அந்த Uncle குமாரைப் பார்த்து, "அழாதே தம்பி! உன்னுடன் வந்த எல்லோரும் தாங்கள் செய்த தவறை உணராமல் தப்பிக்க வகை தேடினார்கள். ஆனால் நீ மட்டும் தான் செய்த தவறுக்காய் வருந்தி மன்னிப்பு கேட்க வந்திருக்கிறாய். உன்னுடைய நல்ல குணத்தை நான் பாராட்டுகிறேன்" என்று சொல்லி வீட்டிற்குள் சென்று ஒரு பெரிய சாக்லேட்டை எடுத்து வந்து அவன் கையில் கொடுத்து அனுப்பினார். இவனும் சந்தோஷமாய் வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தான். அப்பொழுது இவர்கள் விளையாடியது, ஜன்னலை உடைத்தது மற்றும் குமார் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டது எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த ஒரு பெரியவர் ஒருவர் இந்த குமாரை அழைத்து," நீ யார்? உன் பெயர் என்ன? உனக்குள் இப்படிப்பட்ட நல்ல குணங்கள் எப்படி வந்தது?" என்று ஒவ்வொன்றாய் விசாரித்தார். இவன்,"நான் ஒரு கிறிஸ்தவ பையன்" என்று சொல்லி கிறிஸ்துவின் அன்பையும் எடுத்துக் கூறினான். இதைக் கேட்டுக்கொண்டிருந்த அந்த பெரியவரின் உள்ளத்தில், தான் இத்தனை ஆண்டுகளாய் கிறிஸ்தவனாக இருந்தும் தன்னிடத்தில் இப்படிப்பட்ட நல்ல குணநலன்கள் இல்லையே என மனம் வருந்தினார்.
ஆமாம்! தம்பி தங்கச்சி நீங்கள் எப்படி? இந்த குமாரைப் போல செய்த தவறை மறைக்காமல் மன்னிப்பு கேட்டு முன்மாதிரியாய் நடந்து மற்றவர்களை கிறிஸ்துவண்டை வழிநடத்துவீர்களா?
- Mrs. தெபொராள்
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864