By Village Missionary Movement
Wednesday, 23-Oct-2024இன்றைய தியானம்(Tamil) 23.10.2024
ஆள்காட்டி விரல்
"நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்;…" - மத்தேயு 5:10
1960 ல் புளோரெஸ்கோ என்ற போதகருக்கு தீவிரவாதிகளிடமிருந்து சோதனை வந்தது. தன்னுடன் இருக்கும் தேவ பிள்ளைகளையும், ஊழியர்களையும் காட்டிக் கொடுத்தால் விடுவிக்கப்படுவீர்கள் என்று உயிர் தப்புவதற்கான வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அதை மறுத்தார் அந்த ஊழியர். அந்த மறுப்பிற்கு தண்டனையாக அவர் பெற்றது பழுக்க காய்ச்சிய இரும்பு கம்பிகள் அவர் உடலை துளையிட்டது, பல நாட்களாய் பட்டினி போடப்பட்ட எலிகள் அவர் தங்கும் அறைக்குள் விடப்பட்டது. உட்கார இயலாமல் இரண்டு வாரங்கள் அந்த எலிகளை நின்று கொண்டே விரட்டினார். கடைசியாக, அவருடைய 14 வயது மகனை அவருக்கு முன்பாக சித்திரவதை செய்தனர். இதனை பார்த்த அந்த போதகர் கதறினார். அக்கதறுதலின் மத்தியிலும் மகன் கூறினான், "அப்பா என்னைக் கொன்றாலும் பரவாயில்லை. ஆனால் கிறிஸ்தவர்களை காட்டிக் கொடுத்த துரோகியின் மகன் என்ற பெயர் எனக்கு வேண்டாம்" என்றான். தன் மகனை மரிக்க கொடுத்த பின்னும் சிலையாக நின்றார் அவ்வூழியர்.
வேதம் கேட்டின் மகன் என ஒருவனை சுட்டிக்காட்டுகிறது. ஆம், அவன் தான் யூதாஸ்காரியோத்து. (யோவான் 17:12) மூன்றரை வருடங்கள் கிறிஸ்துவுடனே இருந்தவன், சிநேகிதனைப் போல நேசிக்கப்பட்டவன். இயேசு செய்த அற்புதங்களையும், அடையாளங்களையும் கண்ணாரக் கண்டவன். அவரோடு ஒன்றாய் போஜனம் செய்தவன். எப்படித்தான் அவனுக்கு மனம் வந்ததோ அந்த இரட்சகரை, பரிசுத்தரை, குற்றமற்றவரை முப்பது வெள்ளிக் காசுக்கு காட்டி கொடுக்க! பின்னும் அதனை வாங்கியவனுக்கு அதில் வாழத்தான் முடிந்ததா? ஐயோ பரிதாபம்! குடல் சரிந்து, நான்று கொண்டு செத்தான். அவ் வெள்ளிக்காசை கொண்டு நிலத்தை வாங்கினார்கள். அந்நிலம் இந்நாள் வரைக்கும் "இரத்த நிலம்" என்றழைக்கப்படுகிறது. அப் 1:18.
எனக்கன்பானவர்களே! நம்முடைய நிலை என்ன? யூதாஸ் போல் அற்பமான ஆதாயத்திற்காக நம்முடைய ஆள்காட்டி விரலால் மற்றவர்களை குற்றம் சாட்டி துன்பப்படுத்துகிறோமா? இல்லை நீதியின் நிமித்தம் துன்பத்தை சகிக்கிறோமா? மற்றவர்களை விரல் நீட்டி குற்றம் சாட்டும் போது, ஒரு விரல் மற்றவரையும், பெருவிரல் மேல் நோக்கி நம்மை படைத்தவரையும், மற்ற மூன்று விரல்களும் நம்மையே நோக்குகின்றன என்பதனை நிதானித்து அறிந்தால், தேவனின் நியாயத்தீர்ப்பிற்கு தப்பலாம். தேவனுடைய இரக்கம் நம் மேல் இருப்பதாக!
- Sis. மஞ்சுளா
ஜெபக்குறிப்பு:
நம் வாலிபர் முகாமில் அபிஷேகத்தைப் பெற்றுக் கொண்ட வாலிபர்கள் ஒவ்வொரு நாளும் அதில் வளர ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864