By Village Missionary Movement
Saturday, 07-Dec-2024இன்றைய தியானம்(Tamil) 07.12.2024
கர்த்தருக்குள் திடப்படு
“...தாவீது தன் தேவனாகிய கர்த்தருக்குள்ளே தன்னைத் திடப்படுத்திக் கொண்டான்" - 1 சாமுவேல் 30:6
பில்லி கிரஹாம் என்ற பிரசித்தி பெற்ற தேவ ஊழியர் தன் வாழ்நாளில் ஒரு இருண்ட சூழ்நிலையில் இருப்பதைப் போல உணர்ந்து கலங்கி போனார். அவர் சூழ்நிலையிலிருந்து வெளியே வர அதிகமாக கண்ணீரோடு ஜெபித்தார். ஆனால் அவருக்கு விடுதலை கிடைக்கவில்லை. தேவன் அவரை விட்டு விலகிச் சென்றது போல உணர்ந்தார். மனமுடைந்த பில்லி கிரஹாம் தன் தாயாருக்கு ஒரு கடிதம் எழுதினார். அக்கடிதத்திற்கு அவருடைய தாயார் மிக அழகான பதிலை அனுப்பினார். அது என்ன பதில் தெரியுமா? அன்பு மகனே, நீ கலங்காதே, ஆண்டவர் உன் விசுவாசத்தை சோதிக்கவே அவர் உன்னை விட்டு விலகியது போல உனக்கு தோன்றுகிறார். உண்மையில் தேவன் உன்னை விட்டு விலகவில்லை. இத்தகைய சூழ்நிலையில் அவர் மேல் உன் நம்பிக்கை எவ்விதமாக இருக்கிறது என அவர் உன்னை சோதிக்கிறார் என்று அவருக்கு பதில் எழுதினார். அவர் கரங்கள் உனக்காக நீட்டப்பட்டிருக்கிறது. அவர் உன்னை ஒருபோதும் கைவிடமாட்டார் என்று அத்தாயார் கூறிய பதில் பில்லி கிரஹாமை திடப்படுத்தியது.
எல்லோருடைய வாழ்விலும் இது போன்ற சூழ்நிலைகள் வரும். தேவன் கைவிட்டது போல, தனித்து விடப்பட்டது போன்ற சூழ்நிலைகள் வரும். வேதத்திலும் தேவனுடைய இருதயத்திற்கு ஏற்றவராக இருந்த தாவீது, சவுல் ராஜாவால் நேசிக்கப்படவாராக இருந்தார். சவுல் ராஜாவுக்கு ஏற்பட்ட பொறாமையால், தாவீதைக் கொல்ல வகை தேடினார். அப்போது தாவீது காட்டிலும், மலையிலும், கெபிகளிலும் மறைந்து வாழ்ந்தார். அச்சூழ்நிலையிலும் கர்த்தருக்குள் தன்னைத் திடப்படுத்திக் கொண்டார். தன் மகனின் பதவி ஆசையால் விரட்டப்பட்டபோது என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்? எனக்கு உதவி செய்யாமலும், நான் கதறிச் சொல்லும் வார்த்தைகளைக் கேளாமலும் ஏன் தூரமாயிருக்கிறீர்? (சங் 22 : 1) என கதறுகிறார். ஆனாலும் கர்த்தர் பேரில் நம்பிக்கையாய் உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அவர் அற்பமாயெண்ணாமலும் அருவருக்காமலும், தம்முடைய முகத்தை அவனுக்கு மறைக்காமலுமிருந்து, தம்மை நோக்கி அவன் கூப்பிடுகையில் அவனைக் கேட்டருளினார். (சங் 22 : 24) எனக் கூறுகிறார்.
மேலும் தாவீது கர்த்தருக்குள் தன்னை திடப்படுத்திக் கொண்டபடியால், என் ஆபத்துநாளில் எனக்கு எதிரிட்டு வந்தார்கள்; கர்த்தரோ எனக்கு ஆதரவாயிருந்தார். (சங்.18: 18) என கூறுகிறார். அது போல தனித்து விடப்பட்டது போன்ற, இருள் சூழ்ந்தது போன்ற சூழ்நிலைகள் வரும்போது மனம் தளர்ந்து போகாமல் கர்த்தருக்குள் அவருடைய வசனத்தைக் கொண்டு திடப்படும் போது, கர்த்தரின் வல்லமையை நாம் நம் வாழ்வில் ருசி பார்க்க முடியும். கர்த்தரின் வார்த்தையைப் பிடிக்கும் போது அதுவே நம்மைப் பெலப்படுத்தும், விசுவாசத்தை உறுதிப்படுத்தும். நாம் சூழ்நிலையைப் பார்க்கும் போது சோர்வு வந்து பற்றிக்கொள்ளும், பயமும், திகிலும் வந்து சேரும். இறுதியில் தோற்றுப் போயிருப்போம். மாறாக கர்த்தரின் வார்த்தையைக் கொண்டு திடப்படும் போது விசுவாசம் உறுதிப்படும். கர்த்தரின் கரத்தைப் பற்றி ஜெயம் பெற முடியும்.
- Mrs. ஷீலா ஜான்
ஜெபக்குறிப்பு:
எல்லா மாவட்டங்களிலும் சங்கிலித் தொடர் ஜெபம் ஏறெடுக்கப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864