By Village Missionary Movement
Saturday, 11-Jan-2025இன்றைய தியானம்(Tamil) 11.01.2025
உலக சாதனை
"வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும்" - சங்கீதம் 139:24
உசேன் போல்ட் 2007 ஆம் ஆண்டு நடந்த அத்லெடிக் போட்டியில், சில நொடிக்கு முன் எழுந்து ஓட முயன்றதால், அன்று நடைபெற்ற போட்டியில் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். தான் தோல்வியடைந்திருந்தால் கூட பரவாயில்லை, ஆனால் தகுதி நீக்கம் செய்யப்பட்டு விட்டோமே என்று நினைத்தார். இந்தப் பழியை மாற்ற அடுத்த போட்டியில் தங்கம் வென்றால் போதாது, உலக சாதனை படைக்க வேண்டும் என்று பயிற்சி எடுத்தார். அவருடைய டாக்டர் இந்த மாதிரி நீ பயிற்சி எடுத்தால் மாரடைப்பு வர வாய்ப்பு அதிகம் என்று எச்சரித்தார். ஆனாலும் அவர் அந்த கடுமையான பயிற்சியில் அடுத்த கட்ட போட்டியில் உலக சாதனை படைத்தார். அந்த சாதனையை அநேக ஆண்டுகளாக யாராலும் முறியடிக்க முடியவில்லை. தவறு செய்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட மனிதன் கடின முயற்சியால் உலக சாதனை படைத்தார்.
வேதத்திலும் கூட தாவீது அனைவரும் போர்முனையில் இருக்கும் போது, உப்பரிகையில் உலாவி கண்களின் இச்சையில் விழுந்தார். தேவ பிரசன்னத்தை அவரால் உணர முடியவில்லை. அதனால் அவர் தேவ சமுகத்தை விட்டு, தேவனை விட்டு விலகிவிடாமல், விடாப்பிடியாய் அவரைப் பிடித்துக் கெஞ்சுகிறார். சங்கீதம் 51-ல் அவரின் கதறுதலைப் பார்க்கிறோம். பதினொன்றாம் வசனத்தில், உமது சமுகத்தை விட்டு என்னைத் தள்ளாமலும், உமது பரிசுத்த ஆவியை என்னிடத்திலிருந்து எடுத்துக் கொள்ளாமலும் இரும் என்கிறார். தான் பாவம் செய்ததை ஒத்துக் கொண்டு, தேவனின் இரக்கத்திற்காக கெஞ்சுகிறார். நான் தாயின் கர்ப்பத்தில் உருவானது முதல் நான் பாவி, நீரோ பரிசுத்தர், பரிசுத்தத்தை விரும்புகிறவர், என்னை சுத்திகரியும் என மன்றாடுகிறார். நாமும் தாவீதைப் போல் அவரிடம் சென்று, பாவத்தை ஒத்துக் கொண்டு கெஞ்ச வேண்டும். நாம் பாவம் செய்துவிட்டோம் என்ற உணர்வைக் கொடுப்பதே அவர்தான். நாம் அந்த உணர்வை மழுங்கடிக்காமல், உணர்வோடு அவர் கழுவி சுத்திகரிக்கும் படி அவருடைய பாதத்தைப் பிடிக்க வேண்டும். ஏனெனில் அவரே பரிசுத்தமாக்குகிற கர்த்தர்.
இதை வாசிக்கும் தேவப்பிள்ளையே, நீங்கள் செய்த தவறுகளினிமிமித்தம் இந்த உலக மனிதர்கள் உங்களைப் புறக்கணித்து தள்ளியிருக்கலாம். இனி அவ்வளவுதான், நான் வாழ்வது வீண் என்று நினைத்து நீங்கள் புலம்பிக் கொண்டிருக்கலாம். உசேன், நான் பட்ட அவமானத்தால் என்னால் ஓடவே முடியாது என நினைத்திருந்தால், உலக சாதனை படைத்திருக்க முடியாது. அதேபோல் மனிதர்களாகிய நாம் பாவம் செய்வது சகஜம். ஆனால் அதிலேயே இருந்து விடக்கூடாது. பாவத்தை தேவன் வெறுக்கிறார், பாவிகளையோ நேசிக்கிறார். ஆதலால் நீங்கள் பாவத்தோடிருக்க வேண்டியதில்லை. பாவத்தை அறிக்கையிடுங்கள். உங்கள் பாவங்களை எல்லாம் மன்னித்து உங்களை நித்திய ஜீவகரையில் சேர்க்க வல்லவராயிருக்கிறார்.
- Mrs. தவமணி வைரவேல்
ஜெபக்குறிப்பு:
சுகமளிக்கும் ஆராதனையை ஆமென் வில்லேஜ் டிவி மற்றும் youtube-ல் பார்க்கும் மக்கள் தெய்வீக சுகம் பெற ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864