By Village Missionary Movement
Wednesday, 12-May-2021இன்றைய தியானம்(Tamil) 12-05-2021
இல்லத்தை திறவுங்கள்
“...கொர்நேலியு தன் உறவின்முறையாரையும் தன்னுடைய விசேஷித்த சிநேகிதரையும் கூடவரவழைத்து, அவர்களுக்காகக் காத்திருந்தான்.” -அப். 10:24
“பரலோக மனிதன்” என்று அழைக்கப்படும் யூன் என்கிற சீன மிஷனெரி, இரட்சிக்கப்பட்ட ஆரம்ப நாட்களில், அவருடைய தகப்பனார் மரணத்திற்கேதுவாய் வியாதிப்பட்டிருந்தார். அவருடைய சுகத்திற்காக குடும்பத்தோடு ஜெபித்தார்கள். அப்போது தேவன் அற்புதமான சுகத்தைக் கொடுத்தார். அந்நாட்களில் சீன தேசத்தில் கம்யூனிஸ்டு ஆதிக்கம் தலை தூக்கி நின்றது. அந்த சூழ்நிலையிலும் யூன் தன்னுடைய உறவினர்கள், நண்பர்கள், அயல்வீட்டுக்காரர்கள் என தனக்குத் தெரிந்தவர்களை வீட்டிற்கு அழைத்தார். அவர்கள் எல்லாரும் யூனுடைய தகப்பனாரின் அடக்க ஆராதனைக்குத்தான் செல்கிறோம் என்று நினைத்தார்கள். ஆனால் அங்கு அவர் நல்ல சுகத்துடன் இருப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்கள். அப்பொழுது யூனும், அவருடைய குடும்பத்தாரும் இயேசு செய்த அற்புதத்தை அவர்களுக்கு விளக்கிச் சொன்னார்கள். வந்தவர்கள் எல்லாரும் இயேசுவை நோக்கி கண்ணீரோடு ஜெபம் செய்து விசுவாசிகளானார்கள்.
கொர்நேலியு என்கிற தேவ மனுஷனும், தன் வீட்டிற்கு பேதுரு வரப்போகிறார் என்றதும், தேவனுடைய வார்த்தைகளைக் கேட்க தன் உறவினர்களையும், நண்பர்களையும் கூட்டி சேர்த்து பேதுருவுக்காகக் காத்திருந்தார். பேதுரு வந்து அவர்களுக்கு வசனத்தை தெளிவாய் விளக்கி சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஆவியானவர் அவர்களை நிறைத்தார். அப்போது கொர்நேலியுவைப் பார்த்து பரலோகமே மிகுந்த சந்தோஷப்பட்டிருக்கும். அதற்குக் காரணம் கொர்நேலியுவின் இருதயத்தில் அவரது உற்றார் உறவினர் ஆண்டவரை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றிருந்த பாரம். ஆகவேதான் இல்லத்தைத் திறந்தார், ஒரு பெரிய அசைவு உண்டாயிற்று.
அன்பானவர்களே! கொர்நேலியுவைப் போல, யூனைப் போல நமக்கும் இப்படிப்பட்ட ஆசை உண்டா? நாம் அழைத்தால் நம் வீட்டிற்கு விருப்பத்துடன் வருமளவிற்கு, நம்மைக் குறித்த நன்மதிப்பு நம்மைச் சுற்றியுள்ளவர்களிடம் இருக்கிறதா? நம்முடைய சில உறவினர்களும், நண்பர்களும் சபைக்கு வரமுடியாத சூழ்நிலையிருக்கலாம், ஆனால் அவர்களை நம்முடைய வீட்டிற்கு அழைக்க முடியும். அவர்களை வீட்டிற்கு அழைக்க ஒரு தருணத்தை ஏற்படுத்தி, அதாவது பிள்ளைகளின் பிறந்தநாள், திருமணநாட்களில் அவர்களை அழைத்து ஆண்டவர் செய்த நன்மைகளை ஆசையோடு பகிர்ந்து கொண்டாலே ஆண்டவர் அவர்கள் உள்ளத்தில் கிரியை செய்து விடுவார். பின், நாளடைவில் ஒரு வீட்டு ஜெபக்கூட்டத்தை ஒழுங்கு செய்து அதன் மூலம் ஆண்டவரை அறியாதவர்களை சபைகளில் சேர்க்க முடியும். பரலோகத்திலும் மிகுந்த சந்தோஷம் உண்டாகும்.
- S. மனோஜ்குமார்
ஜெபக்குறிப்பு:
இன்று தேனி பணித்தளத்தில் ஊழியம் செய்த நமது மிஷனெரி பியூலா அவர்களின் திருமணத்தை தேவன் அற்புதமாய் நடத்திக் கொடுக்க ஜெபியுங்கள்.
இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app:
தமிழில் பெற - +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250