By Village Missionary Movement
Tuesday, 01-Jul-2025இன்றைய தியானம்(Tamil) 01.07.2025
நினைத்துப் பார்க்கிறேன்
"தேவவசனத்தை உங்களுக்குப் போதித்து உங்களை நடத்தினவர்களை நீங்கள் நினைத்து,... அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்." - எபி. 13:7
பாலமுருகன் என்னும் நான், ஆண்டவரை அறியாத ஒரு குடும்பப் பின்னணியில் பிறந்து வளர்ந்தவன். நான் படிக்கும்போது செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் எனது வீட்டுக்கு அருகிலுள்ள கோவில்களுக்குச் சென்று வழிபாடு செய்வது எனது வழக்கமாக இருந்தது. எனது பள்ளி பருவத்தில் நான் என் நண்பர்களுடன் சேர்ந்து எனது வீட்டின் அருகே உள்ள கோவிலில் உட்கார்ந்து படிப்பது வழக்கம். ஒருநாள் எனது நண்பன், பக்கத்து தெருவிலுள்ள ஒரு வீட்டில் ஜெபக்கூட்டம் நடக்கிறது, "அங்கு வா" என அழைத்ததின் பேரில் சென்றேன். எனக்கு கல்வி கற்றுக் கொடுத்த ஆசிரியைதான் அதை நடத்தி வந்தார்கள். அங்கு சொல்லப்பட்ட தேவ வார்த்தை மூலமாக தொடப்பட்டேன். தொடர்ந்து அந்த ஜெபக்குழுவுக்குச் சென்றேன். இந்தக் காலக் கட்டத்தில் தான் ஒரே ஊரிலிருந்த நானும் சகோதரர் டேவிட் கணேசன் அவர்களும் இரட்சிக்கப்பட்டோம்.
இந்தச் சூழலில் தான் எனது மூத்த சகோதரி தொடர் தலைவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவைச் சிகிச்சை செய்யும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டாள். அந்த சமயத்தில் அவர்களுக்காக ஜெபித்தபோது, போதகர் ஒருவர் மூலம் "உன் ஜெபம் என் சந்நிதியில் கேட்கப்பட்டது. நான் ஆப்ரேஷன் இல்லாமல் சுகம் தருவேன்" என்று தீர்க்கதரிசனமாக பேசினார். அந்த வார்த்தையின்படியே அறுவை சிகிச்சை இன்றி அற்புத சுகமானார். இந்த சுகம் எனது விசுவாசத்தை பெலப்படுத்தியது. என் வாழ்க்கையில் ஏற்பட்ட பல பிரச்சனைகளை ஜெபத்தின் மூலமாகவே மேற்கொள்ள தேவன் எனக்கு உதவி செய்தார்.
ஊழிய அழைப்பை சொப்பனத்தின் மூலமாக தேவன் வெளிப்படுத்தியும் தொடர்ந்து ஒரு தனியார் கம்பெனியில் பணிபுரிந்த என்னை பார்க்கும்பொழுதெல்லாம் டேவிட் கணேசன் அவர்கள் இவ்வாறு கூறுவதுண்டு,"நினிவேக்கு யோனாவை அனுப்ப தேவன் கப்பலை அசைத்தது போல உன் கம்பெனியை மூடினால்தான் நீ ஊழியத்திற்கு வருவாய் என நினைக்கிறேன்" என நகைச்சுவையாய் சொல்வதுண்டு. இறுதியில் நன்றாக நடந்து கொண்டிருந்த எனது கம்பெனியை மூடும் சூழ்நிலை ஏற்பட்டதால் இதற்கு மேல் தேவத்திட்டத்தை எதிர்த்து நிற்கக்கூடாதென்று தீர்மானித்து, முழுநேர ஊழியத்திற்கென்று என்னை அர்ப்பணித்து, கிராம மிஷனெரி இயக்கத்தில் இணைந்து ஊழியம் செய்ய கர்த்தர் எனக்கு கிருபைச் செய்தார்.
என் வாழ்வை நான் திரும்பி பார்த்து கிறிஸ்துவுக்குள் என்னை வழிநடத்தின நபர்களுக்காக நன்றி சொல்வதுண்டு. ஜெபக்கூட்டத்திற்கு என்னை அழைத்து சென்ற நண்பன், ஆத்தும பாரமுள்ள என் ஆசிரியை, என் போதகர், ஊழிய பாரத்தைக் கொடுத்த சகோதரன் டேவிட் கணேசன், தேவ அன்பை ருசிபார்க்கச் செய்த அற்புதங்கள் என்று நினைத்து தேவனை துதிப்பேன். உங்கள் வாழ்வில் இப்படி துதிக்க எத்தனையோ நபர்கள் உண்டல்லவா? அவர்களை நினைவு கூர்ந்து, நன்றி சொல்லி ஜெபியுங்கள். பிறரை தேவனண்டை வழிநடத்தும் நபர்களாக நீங்கள் மாறுங்கள்.
- Bro. பிலிப் பாலமுருகன்
ஜெபக்குறிப்பு:-
இம்மாத ஊழியங்களுக்காக, ஊழியங்களின் தேவைகளுக்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864