By Village Missionary Movement
Wednesday, 02-Jul-2025இன்றைய தியானம்(Tamil) 02.07.2025
அற்புத தேவனும் அதிசயமும்
"...அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்" - 1 பேதுரு 2:24
திருமணமாகி சுமார் 12 ஆண்டுகளுக்கு மேலாக குழந்தையில்லாமல் இருந்த என் பெற்றோரை சந்திக்க ஊழியம் செய்யும் சகோதரி எபிநேசர் வந்தார்கள். அவர்கள் தலையில் கை வைத்து ஜெபித்து, "10 வது மாதம் உங்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கும்" என்று கூறிச் சென்றார்கள். என் தாய் இயேசுவை அறியாத குடும்பத்தில் பிறந்திருந்தாலும், "இயேசு பகவான் எனக்குக் குழந்தை கொடுப்பார்" என விசுவாசித்தார்கள். 10 வது மாதம் என் பெற்றோருக்கு நான் பிறந்தேன். என் தாய் என்னிடம் இதைக் கூறி, விசுவாசத்தை வளர்த்தார்கள்.
ஆண்டவரும் தரிசனத்தின் மூலம், சொப்பனங்களின் மூலம் முக்கியமான காரியங்களை வெளிப்படுத்தினார். கர்த்தரின் சித்தப்படிதான் என் திருமணம் நடக்கிறது என்பதையும் கர்த்தர் கூறினார். திருமணமான 2 வது மாதமே என் கணவர் மிகவும் சுகவீனப்பட்டார். சிறுநீரில் இரத்தம் வெளியேறியது. கர்த்தரிடம் ஜெபித்து சிகிச்சை எடுத்தோம். மருந்து, மாத்திரை, ஊசி என ஒரு வருட சிகிச்சைக்கு பின் சுகமானார். கர்த்தரே சுகத்தை கட்டளையிட்டார். "நான் நல்ல சுகமாயிட்டேன்" என சந்தோஷமானார். அந்த சந்தோஷம் அதிக நாள் நீடிக்கவில்லை. 1981 ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அரிப்பு வந்து கஷ்டப்பட்டார். மாலையில் உடல் முழுவதும் அரிக்கத் துவங்கும், அது தடிப்பாக மாறும். அநேக மருத்துவம் பார்த்தும் பலனில்லை. அடுத்தடுத்து பிரச்சனைகள். பின் அம்மை நோய் வந்தது. கொப்பளங்களில் இருந்து இரத்தம் வழிய ஆரம்பித்தது. அதனால் படுத்த படுக்கையானார். கர்த்தரின் பாதத்தைப் பற்றிப் பிடித்து துதி, தோத்திரங்களை ஏறெடுத்தோம்.
ஒரு கிறிஸ்தவ மருத்துவரின் மருத்துவமனைக்குச் செல்ல உணர்த்தப்பட்டு, "கண்ணீரோடு போகிறோம் ஆண்டவரே! கெம்பீரத்தோடு திரும்பி வர உதவி செய்யும்" என ஜெபித்துக் கொண்டே சென்றேன். போதகர் ஒருவருக்கு எங்கள் நிலையை கடிதம் மூலம் தெரிவித்தோம். அவரும் வந்து விடிய விடிய ஜெபித்து விட்டு "தேவன் ஜீவன் கொடுத்துவிட்டார். எனவே பயப்பட வேண்டாம், ஓய்வு நேரமெல்லாம் ஊழியம் செய்யுங்கள்" என்றார். தேவன் அற்புதமாய் சுகம் கொடுத்தார். பின் பணிபுரிந்து கொண்டே, ஒரு மிஷனெரி இயக்கத்திற்கு முன்னேற்ற பணியாளர்களாக ஊழியம் செய்தோம். இன்று வரை தேவன் சுகமாய் வைத்திருக்கிறார்.
பிரியமானவர்களே! உங்களுடைய வியாதி வேதனையில் கர்த்தரை சார்ந்து கொள்ளுங்கள். நமது குடும்ப மருத்துவர் அவர் தான். வியாதிபடுக்கையில் அவர் நம்மை தாங்குவார், சுமப்பார், தப்புவிப்பார். ஜீவன் தந்த இயேசுவுக்கு ஜீவன் உள்ளவரை இயன்ற ஊழியத்தை செய்யும்படி உங்களை ஒப்புக்கொடுங்கள். அற்புத தேவன் அதிசயமாய் உங்களை நடத்துவார்.
- Mrs. வனஜா பால்ராஜ்
ஜெபக்குறிப்பு:-
Day Care Centre லுள்ள பிள்ளைகளின் ஞானத்திற்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864