By Village Missionary Movement
Friday, 11-Jul-2025இன்றைய தியானம்(Tamil) 11.07.2025
முப்பதும் அறுபதும் நூறுமாய்...
"இந்தச் சிறியரில் ஒருவனையும் அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்;..." - மத்தேயு 18:10
எனது சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் சாத்தூர். இங்கு 1990 களில் மக்களின் வாழ்வாதார தொழிலாக தீப்பெட்டித் தொழில் இருந்தது. ஜனங்கள் மிகவும் கஷ்டப்பட்டு தீப்பெட்டி தொழிற்சாலைகளில் வேலை செய்து, தங்களுடைய பிள்ளைகளை படிக்க வைப்பது, வீட்டு வாடகை கொடுப்பது இன்னும் பல அத்தியாவசியமான தேவைகளை சந்திப்பதில் போராடிக் கொண்டிருந்த காலகட்டம் அது. அந்நாட்களில் எங்கள் தெருவில் 15 சிறுவர்கள் ஒன்று கூடி கிரிக்கெட் விளையாடுவது வழக்கம். எங்களுக்குள் கெட்ட வார்த்தைகள் பேசுவது, சண்டை போடுவது, வீட்டிற்கு கீழ்ப்படியாமல் இருப்பது போன்ற பல காரியங்கள் சகஜமாக இருந்தது.
ஒரு முறை சிவகாசியிலிருந்து ஒரு அக்கா சிரித்த முகத்துடன் எங்களது தெருவிற்கு வந்து ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை பற்றி எங்களுக்குச் சொன்னார்கள். அடுத்த வாரம் நான் வந்து உங்களுக்கு கதை சொல்லித் தருகிறேன் என்று கூறிவிட்டு சென்றார்கள். அதேபோல் அடுத்த வாரம் வந்தது. என்னைத்தவிர வேறு ஒருவரும் அங்கு இல்லை. என் ஒருவனை மட்டும் அவர்கள் உட்கார வைத்து இயேசு கிறிஸ்துவை குறித்துச் சொல்லி, புதிய ஏற்பாட்டை கொடுத்தார்கள். என்னுடைய வீட்டிற்கு வந்து எனக்காகவும், என் குடும்பத்திற்காகவும் ஜெபித்தார்கள். கெட்ட வார்த்தை பேசக்கூடாது என்று எனக்கு சொல்லிக் கொடுத்தார்கள்.
வாரந்தோறும் என்னைத் தேடி வருவார்கள். எனக்கு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அன்பை குறித்து இன்னும் அதிகமாக சொல்லிக் கொடுத்தார்கள். நானும் அவர்கள் கொடுத்த புதிய ஏற்பாட்டை வாசிக்க ஆரம்பித்து, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை என்னுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டு, கெட்ட வார்த்தைகள் பேசுவதை விட்டு விட்டேன், என்னுடைய பெற்றோருக்கு கீழ்ப்படிய ஆரம்பித்தேன். இரண்டு மாதங்கள் கழித்து அவர்கள் வருவதற்கு முன்னே நான் என்னுடைய தெருவில் இருக்கிற 10 சிறு பிள்ளைகளை கூட்டி, அக்காவின் வருகைக்கு ஆயத்தமாக இருந்தேன். மேலும் நான் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த பின்பு அந்த அக்காவினுடைய ஊழிய குழுவில் இணைந்து கிராமங்களுக்குச் சென்று சிறுவர் ஊழியம் செய்ய ஆரம்பித்தேன். இப்படியாக நான் ஊழியத்திற்கு என்னை அர்ப்பணித்து பின் நாட்களில், வட இந்தியாவிலுள்ள சட்டீஸ்கர் மாநிலத்திற்கு மிஷனெரியாக புறப்பட்டுச் சென்றேன்.
அந்த அக்கா என் ஒருவனுக்காக எடுத்த சிறுவர் ஊழியம் வீணாகவில்லை. இன்று கிராம மிஷனெரி இயக்க ஊழியத்தில், வட இந்திய ஊழியங்களை செய்கின்ற ஒரு மிஷனெரியாகவும், அங்குள்ள ஊழியர்களை உருவாக்குகிற ஒரு ஊழியப் பொறுப்பாளனாகவும் என்னை மாற்றியுள்ளது. அன்றைக்கு என் இருதயத்தில் விதைக்கப்பட்ட அந்த விதை 30 ஆகவும், 60 ஆகவும், 100 ஆகவும் பலன் கொடுத்துக் கொண்டே இருக்கிறது. இதை வாசிக்கிற நீங்கள் சிறுவர் ஊழியத்தை உற்சாகத்தோடு செய்யுங்கள். மிகுந்த பலனைக் காணுங்கள். ஆமென்.
- T. சங்கர்ராஜ்
ஜெபக்குறிப்பு:-
நம் வளாகத்தில் ஊழியர் பயிற்சிக் கட்டிடம் கட்டப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864