By Village Missionary Movement
Saturday, 12-Jul-2025இன்றைய தியானம்(Tamil) 12.07.2025
வைராக்கியம்
"நல்விஷயத்தில் வைராக்கியம் பாராட்டுவது நல்லதுதான்;..." - கலாத்தியர் 4:18
புற மார்க்கத்தில் பிறந்த நான் விடுமுறை நாட்களில் நடைபெற்ற VBS ஊழியங்கள் மூலமாக இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டேன். பின்பு ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது, என்னுடைய வாழ்க்கையை வட இந்திய பகுதியில் ஊழியம் செய்வதற்கு அர்ப்பணித்தேன். எனவே, அந்நாட்களில் பள்ளி மூலமாக கற்றுக் கொடுத்த ஹிந்தி வகுப்பில் பங்கு பெற்று ஹிந்தி மொழியை கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். இப்படியாக நாட்கள் கடந்து செல்லவே, ஹிந்தி ஆசிரியை ஒருநாள் ஒரு குறிப்பிட்ட பகுதியை ஹிந்தியில் படித்துக் காட்டச் சொன்னார்கள். நானோ தவறாக படித்துக் காட்ட, ஆசிரியர் மிகவும் கோபமடைந்து என்னைத் திட்டினார். அன்று முதல் ஹிந்தி படிக்கும் முயற்சியை கைவிட்டேன்.
வருடங்கள் கடந்தோடியது. தேவனிடம் நான் ஜெபித்துக்கொண்டபடியே, வட இந்திய பகுதியில் ஊழியம் செய்யும் நபரையே தேவன் எனக்கு வாழ்க்கைத் துணையாகக் கொடுத்தார். குடும்பமாக சட்டீஸ்கர் பகுதிக்கு கடந்துச் சென்றோம். ஆனால் எனக்கோ ஹிந்தி மொழி பேச தெரியாத காரணத்தினால் யாருடனும் பழக முடியாமல் போனது. காரணம் அன்று ஆசிரியர் திட்டினதால், ஹிந்தி படிக்க மாட்டேன் என்ற என் தவறான வைராக்கியமே. ஹிந்தியை பேசினால் தான் ஊழியம் செய்ய முடியும் என்ற நிர்பந்தமான சூழ்நிலையில் தான் ஹிந்தியை வைராக்கியத்துடன் படிக்க முயற்சித்தேன். இதற்காகவே பிரத்தியேகமாக 40 நாட்கள் உபவாசத்துடன் ஜெபித்துக் கொண்டே, ஹிந்தி படிப்பதை தொடர்ந்தேன். எனக்கு மிகுந்த வைராக்கியம், எப்படியாகிலும் ஒரு நாள் ஹிந்தியில் பேசி விடுவேன் என்று. அதுபோலவே, அந்த 40 நாட்கள் ஜெபம் முடிந்த போது, ஒரு நாள் நாங்கள் இருந்த பகுதியில் பிரசங்கம் செய்வதற்கு வாய்ப்பு கிடைக்க, முதன்முறையாக ஹிந்தியில் பிரசங்கம் செய்தேன். அன்று கர்த்தர் என் நாவைத் தொட்டார். அன்று முதல் இன்று வரை தேவ கிருபையினால் ஹிந்தியில் பேச முடிகிறது.
எண்ணாகமம் 25 ம் அதிகாரத்தில், இஸ்ரவேல் ஜனங்களில், முறையற்ற ஒரு காரியத்தை பார்க்கிறோம். அதினிமித்தமாக பினெகாஸ் பக்தி வைராக்கியம் காண்பித்ததினால், இஸ்ரவேல் புத்திரர்மேல் உண்டான கர்த்தரின் உக்கிரத்தை திருப்பினார்.
இதை வாசிக்கின்றதான பிரியமானவர்களே! இங்கு வைராக்கியம் என்பது தேவன் மீதுள்ள அன்பை குறிக்கிறது. தேவையில்லாத காரியங்களின் மீது வைராக்கியம் கொள்ளும் போது, அது தேவனைத் துக்கப்படுத்துகிறது. ( உதாரணமாக மற்றவர் மீதுள்ள கோபம், வெறுப்பு, கசப்பு). நீங்களும் நானும் தேவையுள்ள காரியங்களின் மீதும், தேவன் மீதும் பக்தி வைராக்கியம் காட்ட வேண்டும். உண்மையாகவே நாம் ஒவ்வொருவரும் தேவனுக்குரிய காரியத்தில் வைராக்கியம் பாராட்டுவோம் என்றால் இந்திய தேசத்தை சீக்கிரத்தில் இயேசுவுக்கு சொந்தமான தேசமாக மாற்றிடலாம். எனவே வைராக்கியமுள்ளவர்களாக மாறுவோமா?
- Mrs. சக்தி சங்கர்
ஜெபக்குறிப்பு:-
ஊழியர் பயிற்சி கட்டிடத்திற்கான அரசாங்க அனுமதி கிடைக்க ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864