By Village Missionary Movement
Sunday, 17-Aug-2025இன்றைய தியானம்(Tamil) 17.08.2025 (Kids Special)
தேடி வந்த இயேசு
"இழந்துபோனதைத் தேடவும், இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார்" - லூக்கா 19:10
மே... மே... என்ற சத்தம் கேட்டுது. எங்கேன்னு தானே நினைக்கிறீங்க, நிறைய ஆடுகள் உள்ள ராமு வீட்டில் தான். நீங்க எல்லாரும் காலையில் எழுந்து கிளம்பி Schoolக்கு போவீங்க. ஆனால் இந்த ராமு ஆடு மேய்க்க போய் விடுவான். நல்ல கெட்டிக்கார பையன். மரத்தடியில் உட்கார்ந்து ஆடுகளை மேயவிட்டு கவனமாக பார்த்துக் கொள்வான். ஒரு நாள் திடீர்னு மழைமேகமாய் இருந்ததால், ஆடுகளை வீட்டிற்கு அழைத்துக்கொண்டு போக சத்தம்போட்டு கூப்பிட்டான். அவன் சத்தத்தை கேட்டவுடன் எல்லா ஆடுகளும் வந்து விட்டது. ஒரு குட்டி ஆடு மட்டும் ஜாலியா விளையாடிக்கொண்டு இருந்தது. மழை பெய்ய ஆரம்பித்ததால் வேகமாக ஆடுகளை ஓட்டிக் கொண்டு போனான் ராமு. அந்த குட்டி ஆடு ராமுவைத் தேடிப் பார்த்தது. ஆனால் ராமுவோ அதன் கண்களில் அகப்படவில்லை. சுற்றிலும் பார்த்த ஆட்டுக்குட்டிக்கு வழி தெரியவில்லை. மே... மே... என்று கத்திப் பார்த்தது. சிறிது நேரத்தில் பொழுது அடைய ஆரம்பித்தது. என் எஜமான் கூப்பிட்ட போது, நான் போகவில்லையே, சத்தம் கேட்டும் கீழ்ப்படியாமல் இருந்து விட்டேனே என்று நினைத்தபடியே நடந்து கொண்டிருக்கும்போது, இருட்டாயிருந்ததால் முள்ளுக்குள்ளே மாட்டிக் கொண்டது. மழை பெய்து கொண்டிருப்பதால் சேரும், சகதியுமாக இருந்தது. துள்ளிகுதித்து பார்த்தும் அதனால் எழும்ப முடியவில்லை.
வீட்டிற்கு போன ராமு தொழுவத்தில் ஆடுகளை எண்ண ஆரம்பித்தான். சேட்டைக்கார குட்டி ஆட்டை காணவில்லையே! என்று அப்போதுதான் கண்டுபிடித்தான். எனவே குட்டி ஆட்டைத் தேடி கையில் டார்ச்சுடன் வேகமாக ஓடினான். ராமுவின் மாமா வழியில் நின்று தடுத்து நிறுத்தினார். அவன் இருதயம் பட, படன்னு துடித்தது. சத்தமிட்டு கூட்பிட்டு கொண்டே செல்கிறான். முள்ளுக்குள்ளே மாட்டிக்கிட்ட குட்டிக்கு ராமுவின் சத்தம் கேட்டதும் ரொம்ப சந்தோஷம். மே... மே... என்று மீண்டும் சத்தம் போட ஆரம்பித்தது. தூரத்தில் துஷ்ட மிருகங்கள் கத்துகிற சத்தம் கேட்டது. வேகமாக அந்த குட்டியை தூக்கினதால், கையில் எங்கும் முள் குத்தி காயம் ஏற்பட்டு இரத்தம் வடிய ஆரம்பித்தது. ராமு தோளில் அமர்ந்திருந்த குட்டியை அன்புடன் தடவிக் கொடுத்தான். தன் கையிலுள்ள காயத்தைப் பார்க்காமல் ஆட்டுக்குட்டி கிடைத்த சந்தோஷத்தில் வேகமாய் வீட்டை நோக்கி நடந்தான்.
அன்பு செல்லங்களே! மேய்ப்பனின் சத்தத்திற்கு கீழ்ப்படியாமல், ஆபத்தில் மாட்டிக் கொண்ட அந்த ஆட்டுக் குட்டியை போல நாமும் பாவம் செய்து , சாத்தானின் கையில் மாட்டிக்கொண்டு வேதனைபட்டபோது, இயேசு நம்மையும் தேடி வந்து, அநேக காயங்கள் பட்டு தன் உயிரை தந்து நம்மை மீட்டுக் கொண்டார். இந்த அன்பை என்றைக்கும் மறக்கக் கூடாது குட்டீஸ்!
- Mrs. அன்பு ஜோதி ஸ்டாலின்
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864