By Village Missionary Movement
Friday, 04-Jun-2021இன்றைய தியானம்(Tamil) 04-06-2021
விசுவாசி! பயப்படாதே!
“மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல், வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை… சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்.” – 1கொரிந்தியர் 10:13
சமீபத்தில் நான் ஒரு தனியார் வங்கிக்கு சென்றபோது எனக்குத் தெரிந்த நகைமதிப்பீட்டாளர், “என்ன மேடம், இந்த தொற்றுநோய் எப்பொழுது தான் நீங்கும்? ஒரே பயமும், பதற்றமும், கவலையுமாக இருக்கிறது. எனக்காக என் குடும்பத்திற்காக ஜெபித்துக்கொள்ளுங்கள்” எனக் கவலையுடன் சொன்னார். அவருக்கு சில நிமிடங்கள் ஆறுதலான வார்த்தைகளை சொல்லி தைரியப்படுத்தி வந்தேன்.
ஆம், இந்த 2ம் அலை மிகப் பயங்கரமாக தாண்டவமாடி, அநேக தேவப்பிள்ளைகள், மிகப்பெரிய பிரபலங்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், நம் நண்பர்கள் ஏன் சில உறவினர்களையும் கூட சூறையாடிக் கொண்டிருக்கிறது. இத்தொற்று மிகவும் அதிகரித்து வரும் நிலையில் மருத்துவமனைகளில் இடமில்லாமை, மருந்து பற்றாக்குறை, ஆக்ஸிஜன் தட்டுப்பாடு எனப் பல இடர்ப்பாடுகளும் காணப்படுகிறது. ஆனால் இந்தக் கொள்ளைநோயை விட மிகமிகக் கொடியது நம்மிடையே காணப்படும் ஒருவித பயமும் பதற்றமுமே! நான் இதை எழுதிக் கொண்டிருக்கும்போது கர்நாடகாவில் சிக்மளூர் என்ற ஊரில் நடந்த செய்தியறிந்து துடித்துப்போனேன். ஓய்வுபெற்ற நன்கு வசதியுடைய தாசில்தார் தனக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அறிந்தவுடன், தன்னால் தன் குடும்பத்தினருக்கு பரவி விடுமோ என்ற அச்சத்தால் கடிதம் எழுதி விட்டு தன்னை தானாகவே மாய்த்துக்கொண்டார். என்னே பரிதாபம்! “தேவன் நமக்கு பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும், அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்” (2தீமோ.1:7). பயம், பதற்றம், கவலை வேண்டாம்.
இன்றைய வேதபகுதியில் வயதான காலத்தில், வாக்குத்தத்தத்தின்படி பிறந்த மகனான ஈசாக்கை பலியிடும்படியான சோதனை தேவனின் கட்டளையாக வந்தது. காலமே எழுந்து தேவையானவற்றை எடுத்துக் கொண்டு விவரம் தெரிந்த தன் அன்பு மகனையும் அழைத்துச் சென்ற ஆபிரகாமின் கீழ்ப்படிதல் நம்மை புல்லரிக்க வைக்கிறதல்லவா? நம்மால் இயலுமா? ஆனால் ஆபிரகாமிடம் காணப்பட்ட “திரும்ப வருவோம்” என்ற விசுவாசம், “தகனபலிக்கான ஆட்டுக்குட்டியை தேவன் பார்த்துக்கொள்வார்” என்ற நம்பிக்கையான வார்த்தைகள் எல்லாவற்றுக்கும் மேலாக “உன் சந்ததியை பெருகப்பண்ணுவேன்” என்ற தேவனின் வாக்குறுதியையும் நன்கு உணர்ந்திருந்தார். வெற்றியுடன் தன் மகனுடன் வந்தார்.
எனக்கன்பானவர்களே! “உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்” (யோவான் 16:33) என்ற ஜெயகிறிஸ்து உங்களுடன் இருக்கிறார். மிகுந்த பலனுக்கேதுவான தைரியத்தை விட்டுவிட வேண்டாம். வேதத்தில் அநேக தேவதாசர்களை தேவன் உபத்திரவத்தின் பாதைகளிலிருந்து மீட்டெடுத்துள்ளார். உங்களையும் மீட்பார். கொரோனா நெறிமுறைகளை பின்பற்றி, அனைவரும் பாதுகாப்பாக இருக்க தேவன் உதவி செய்வாராக! ஆமென்.
- Mrs. சரோஜா மோகன்தாஸ்
ஜெபக்குறிப்பு:
குடி போதைக்கு அடிமையாகி உள்ள மக்கள் விடுதலை பெற ஆரம்பிக்கப்பட்டுள்ள Peace Centre -க்காக ஜெபியுங்கள்.
இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app:
தமிழில் பெற - +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250