By Village Missionary Movement
Monday, 17-Nov-2025இன்றைய தியானம்(Tamil) 17.11.2025
வேலையில் வேகம்
"பகற்காலமிருக்குமட்டும் நான் என்னை அனுப்பினவருடைய கிரியைகளைச் செய்ய வேண்டும்; ஒருவனும் கிரியை செய்யக் கூடாத இராக்காலம் வருகிறது" - யோவான் 9:4
வாலிபன் ஒருவன் சாலையோரமாக நடந்து சென்று, தேவனுடைய வார்த்தை அடங்கிய நற்செய்தி பிரதிகளை, அந்த வழியாகச் சென்ற ஒவ்வொருவர் கையிலும் வேக வேகமாக கொடுத்துக் கொண்டே சென்றான். இதைக் கவனித்த ஒரு போதகர், ஏன் இவ்வளவு வேகமாக இந்த நற்செய்தி பிரதிகளைக் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்? சற்று நிதானமாக கொடுக்கலாமே என்று கேட்டார். அப்பொழுது அவன் சொன்ன பதில் அவரை ஆச்சரியப்பட வைத்தது. நான் ஒரு நோயாளி, என் உடலைப் பரிசோதித்த மருத்துவர்கள், உன் வாழ் நாள் இன்னும் சில மாதங்கள் மாத்திரமே என்று கூறிவிட்டனர். ஆகவே அதற்குள்ளாக என்னால் எவ்வளவு வேகமாக இயேசு கிறிஸ்துவைப்பற்றிய நல்ல செய்தியை மக்களிடம் பகிர்ந்து கொள்ள முடியுமோ, அவ்வளவு வேகமாக இந்த நற்செய்தி பிரதிகளைக் கொடுத்து வருகிறேன். தேவன் எனக்கு கிருபையாய் கூட்டிக்கொடுக்கும் என் ஆயுசுநாட்களை அவருக்காய்,ஆத்தும ஆதாயத்திற்காய் செலவிட வாஞ்சிக்கிறேன் என்று கூறினான்.
அன்பான தேவ ஜனமே, உடல் ஆரோக்கியத்துடன் காணப்படுகிற நாமும் ஒரு நாள் முடிவை சந்தித்துத்தான் ஆக வேண்டும். எனவே நமக்கு இருக்கிற இந்த குறுகிய நாட்களுக்குள் நமக்குரிய பணியை நாம் செய்து முடிக்க வேண்டும். ஒவ்வொரு நிமிடம் கடந்து செல்லும் போதும், நாம் வேலை செய்வதற்குரிய நேரம் குறைந்து கொண்டே வருகிறது. நாம் விழிப்போடு காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ள வேண்டும். இயேசு கிறிஸ்துவின் நோக்கமும், "நான் என்னை அனுப்பினவருடைய கிரியைகளைச் செய்ய வேண்டும்" என்பதாய் இருந்தது. சீஷர்கள் இயேசுவை நோக்கி: ரபீ, போஜனம் பண்ணும் என்று வேண்டிக்கொண்ட போது அவர், "நான் புசிப்பதற்கு நீங்கள் அறியாத ஒரு போஜனம் எனக்கு உண்டு. நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது" என்றார்.
இயேசு இவ்வுலகத்திற்கு அனுப்பப்பட்டார். ஆகவே நாம் நித்திய ஜீவனை அடைந்திருக்கிறோம். நம்மைப் படைத்தவருடைய சித்தத்தை செய்வதே நம் நோக்கமாக இருக்க வேண்டும். "ஒருவனும் கிரியை செய்யக்கூடாத இராக்காலம் வருகிறது" என்று வேதம் நம்மை எச்சரிக்கிறது. கிரியை செய்ய முடியாத அந்த காலம் வருவதற்கு முன் உணர்வடைந்தவர்களாய், ஜாக்கிரதையோடு நம் கடமைகளை செய்து முடிக்க பிரயாசப்படுவோம். தேவன் தாமே நம்மை பெலப்படுத்தி, தைரியப்படுத்தி, நமக்கு ஒத்தாசையை நல்குவாராக.
- Bro. பவுல்ராஜ்
ஜெபக்குறிப்பு:-
தொற்காள் தையல் பயற்சி திட்டத்தில் பயன் பெறுகிறவர்கள் வாழ்வு கர்த்தருக்குள் ஆசிர்வதிக்கப்பட ஜெபியுங்கள்
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864