By Village Missionary Movement
Tuesday, 18-Nov-2025இன்றைய தியானம்(Tamil) 18.11.2025
கிரமமாய் செய்வோம்
"சகலமும் நல்லொழுக்கமாயும் கிரமமாயும் செய்யப்படக்கடவது" - 1 கொரி. 14:40
ஜான் என்பவர் ஒரு நாள் காலையில், புத்தகங்கள் நிறைந்த பெரிய பெட்டி ஒன்றைத் தனது வீட்டின் முன்கதவு வழியாக தள்ள முயற்சி செய்து கொண்டிருந்தார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த அவரது அண்டை வீட்டுக்காரர் ஜெபஸ்டின், அவருக்கு உதவி செய்ய ஓடி வந்தார். தனக்கு உதவ வந்த ஜெபஸ்டினைப் பார்த்ததும் ஜானுக்கு மிகுந்த மகிழ்ச்சி.
பின்னர் இருவரும் சேர்ந்து அப்பெட்டியைத் தள்ளினார்கள். ஆனால் அந்த பெட்டியை ஒரு அங்குலம் தான் நகர்த்த முடிந்தது. மிகவும் களைப்புற்ற ஜெபஸ்டின் தன் நண்பர் ஜானைப் பார்த்து, நாம் இருவரும் 5 நிமிடம் ஓய்வு எடுத்து விட்டு, பின்பு தள்ளுவோம். எப்படியாவது பெட்டியை வீட்டை விட்டு வெளியே தள்ளி விடலாம் என்று கூறினார். அதைக் கேட்ட ஜான் அதிர்ச்சியடைந்தார். நான் பெட்டியை வீட்டை விட்டு வெளியே தள்ளவில்லை, வீட்டிற்கு உள்ளே தான் தள்ளிக் கொண்டிருந்தேன் என்றார். நீண்ட நேரம் முயன்ற போதிலும் பெட்டி ஒரு அங்குலம் மட்டுமே நகர்ந்ததன் மர்மம் அப்போது தான் அவர்களுக்கு புரிந்தது.
பெட்டியை ஜான் உள்ளே தள்ளிக்கொண்டிருந்திருக்கிறார். ஜெபஸ்டினோ வெளியே தள்ளிக்கொண்டிருந்திருக்கிறார். பெட்டி எப்படி நகரும்? சற்று நேர இடைவெளிக்குப்பின்னர், மீண்டும் இருவரும் ஒன்றாக இணைந்து அந்தப் பெட்டியை உள்ளே தள்ளினர். அவர்களது கூட்டு முயற்சி நல்ல பலனைத் தந்தது. இப்போது பெட்டியை வைக்க வேண்டிய இடத்திற்குக் கொண்டு போய் வைக்க அவர்களால் முடிந்தது. நாம் செய்கின்ற காரியத்தில் வெற்றிப் பெற, நாம் ஒன்று சேர்ந்து வேலை செய்தால் மட்டும் போதாது, ஒரே நோக்கத்துடன் செயல்பட வேண்டும்.
நம் வாழ்விலும் தேவனை மகிமைப்படுத்துவதே நம்முடைய ஒரே நோக்கமாக இருக்க வேண்டும். 1 கொ. 14:26 ல், "நீங்கள் கூடிவந்திருக்கிறபோது, உங்களில் ஒருவன் சங்கீதம் பாடுகிறான், ஒருவன் போதகம் பண்ணுகிறான், ஒருவன் அந்நியபாஷையைப் பேசுகிறான், ஒருவன் இரகசியத்தை வெளிப்படுத்துகிறான், ஒருவன் வியாக்கியானம்பண்ணுகிறான். சதோதரரே, இது என்ன? சகலமும் பக்திவிருத்திக்கேதுவாகச் செய்யப்படக்கடவது" என்று அப்போஸ்தலனாகிய பவுல் எழுதுகிறார்.
நான் செய்கிற காரியம் மட்டுமே முக்கியமானது, சரியானது என்று நாம் நினைக்கக்கூடாது. அது சுயமகிமையை நாடுதல் ஆகும். குடும்பமானாலும், சபையானாலும் தேவநாமத்தின் மகிமைக்காக ஒருமனதுடன் ஒரே நோக்கத்துடன் செயல்படும் போது அது ஆசீர்வாதம். நம்முடைய சுயசித்தத்தை வெறுப்பதே நம்மை ஆவிக்குரியவர்களாக்கும். சுயசித்தத்தை வெறுத்து, தேவனுடைய சித்தத்தைச் செய்ய நம்மை ஒப்புக்கொடுப்போம். தேவ சித்தம் நிறைவேற்றுவோம்.
சுயத்தை ஒழிப்போம்!
பிறர் நலம் காப்போம்!
- Mrs. கலைச்செல்வி பவுல்ராஜ்
ஜெபக்குறிப்பு:-
வாலிபர்களுக்காக வெளியிடப்படும் கண்மணியே கேள், யோசுவாவே எழும்பு பத்திரிக்கை ஊழியங்களுக்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864