By Village Missionary Movement
Tuesday, 25-Nov-2025இன்றைய தியானம்(Tamil) 25.11.2025
முயற்சி திருவினையாக்கும்
"செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்;..." - பிரசங்கி 9:10
ஒரு அரசன் போட்டி ஒன்றை அறிவித்தான். கோட்டைக் கதவைக் கைகளினால் திறந்து தள்ள வேண்டும். வெற்றி பெற்றால் நாட்டின் ஒரு பகுதி தானமாக வழங்கப்படும். தோற்றால் தோற்றவனின் கைகள் வெட்டப்படும் என்பது நிபந்தனை.
மக்கள் பலவாறாக யோசித்து பயந்து, யாரும் போட்டியில் கலந்துகொள்ள முன்வரவில்லை. ஒரே ஒரு இளைஞன் மட்டும் போட்டியில் கலந்து கொள்ள முன்வந்தான். போட்டியில் தோற்று விட்டால் கைகளை வெட்டி விடுவார்களே உன்னுடைய எதிர்காலம் என்னவாகும்? என்று பலரும் கேள்வி எழுப்பினர். அதற்கு அந்த இளைஞன் மறுமொழியாக ஐயா, போட்டியில் வென்றால் நானும் ஒரு அரசன். தோற்றால் கைகள் தானே போகும், உயிர் இல்லையே! என்று கூறினான்.
பின்னர் கோட்டைக் கதவைத் தள்ளினான். என்ன அதிசயம்! கதவு சட்டெனத் திறந்து கொண்டது. ஏனென்றால், கோட்டைக் கதவுகளில் தாழ்ப்பாள் போடப்படவில்லை, திறந்து தான் இருந்தது. இன்றும் பல பேர் இப்படித் தான் இருக்கிறார்கள். தோற்று விடுவோமோ, எதையாவது இழந்து விடுவோமோ என்று பயந்து எதற்கும் முயற்சிக்காமலேயே இருந்து விடுகிறார்கள்.
வேதத்தில் கூட தாலந்து உவமையை இயேசு கூறும் போது, தன்னிடம் கொடுக்கப்பட்ட திறமையைப் பயன்படுத்தாதவரை கடிந்து கொண்டும், திறமையை பயன்படுத்தியவர்களை மேலும் கனப்படுத்தியதையும் வாசிக்கிறோம். ஆம், நம் ஒவ்வொருவரிடமும் வெவ்வேறு தனிப்பட்ட திறமைகளை தேவன் தந்திருக்கிறார். அதைக் கண்டறிந்து வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்பொழுது நம்முடைய முயற்சிக்குத் தகுந்த பலனை தேவன் அருளுவார்.
பிரியமானவர்களே! இன்று பலரும் ஒரு தாலந்தை பெற்றவனைப் போல எந்தத் திறமையும் என்னிடம் இல்லை என்று புலம்பிக் கொண்டே இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் வாழ்க்கையில் உயர முடியாது. நம்முடைய தாலந்தைப் பயன்படுத்த முயற்சி எடுக்கும் போதுதான் தேவன் நம்மை ஆசீர்வதித்து உயர்த்த முடியும். 2 பேதுரு 1:10 ல் "சகோதரரே,உங்கள் அழைப்பையும் தெரிந்துகொள்ளுதலையும் உறுதியாக்கும்படி ஜாக்கிரதையாயிருங்கள்; இவைகளைச் செய்தால் நீங்கள் ஒருக்காலும் இடறிவிழுவதில்லை" என்று வாசிக்கிறோம். நம்முடைய திறமையை புதைத்து வைக்காமல், அதை தேவனுக்காய் பயன்படுத்தி வாழ்வில் உயர்வை பெற்றுக் கொள்வோம்! ஆமென்!
- Mrs. திவ்யா அலெக்ஸ்
ஜெபக்குறிப்பு:-
ஆமென் வில்லேஜ் டி.வி. பார்ப்பவர்கள் கிறிஸ்துவுக்காய் செயல்படுகிறவர்களாக மாற ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864