By Village Missionary Movement
Tuesday, 10-Feb-2026இன்றைய தியானம்(Tamil) 10.02.2026
தீர்மானத்தில் உறுதி
"நல்விஷயத்தில் வைராக்கியம் பாராட்டுவது நல்லதுதான்;…" - கலாத்தியர் 4:18
அரவிந்த் என்பவர் ஒரு அலுவலகத்தில் பணிபுரிந்தார். வேலைக்கு வருவதிலும், பொறுப்புகளை நிறைவேற்றுவதிலும் நேர்மையை காத்துக் கொண்டார். சுற்றியுள்ள சிலர் சுலபமான குறுக்கு வழியைத் தெரிந்தெடுத்து, தவறு செய்ய இணங்கச் சொன்னாலும், அரவிந்த் தன் மனசாட்சிக்கும், தேவனுக்குப் பயப்படும் பயத்திலும் தேவனுக்கு விரோதமாக எதையும் செய்ய விரும்பவில்லை. அரவிந்தின் நேர்மை அவரை சில நேரங்களில் தனிமையாக்கினாலும் அவர் உண்மையாயிருந்தார். நாட்கள் நகர்ந்தன, அவருடைய தீர்மானம், நல் நடத்தை அவருக்கு பதவி உயர்வு பெற, அவர் பேரில் மரியாதை ஏற்பட காரணமாயிற்று.
வேதத்திலும் கூட தானியேல், பாபிலோன் தேசத்திற்கு சிறை பிடித்துக் கொண்டு போகப்பட்டார். ராஜ போஜனம் வேண்டாம் என அங்கு ஒரு தீர்மானம் எடுக்கிறார். ஏனென்றால், தேவன் லேவியராகமம் 11ம் அதிகாரத்தில் புசிக்க கூடியவை, புசிக்கக் கூடாதவை என ஒரு பட்டியல் கொடுத்திருப்பார். அதில் தேவன் விலக்கினவை போஜனத்தில் இருக்கலாமே என நினைத்து, வேண்டாம் என தீர்மானம் எடுத்திருக்கலாம். ஆனால் தீர்மானத்தில் உறுதியாக இருந்தார். 10 நாள் சோதித்துப் பார்த்த பின் மற்ற எல்லாரையும் விட முகம் களையுள்ளதாய், சரீரம் புஷ்டியாயிருந்தது. சில மாதங்களுக்குப் பின் ராஜா சோதித்த எல்லா விஷயத்திலும் மற்றவர்களை விட 10 மடங்கு சமர்த்தராக காணப்பட்டனர். தானியேல் எடுத்த தீர்மானம் ரொம்ப ஆபத்தானது. ஏனெனில் சிறை பிடித்து அடிமையாய் போன இடத்தில் மேல் அதிகாரிகள், தான் சந்திக்கிற புது மனிதர்கள் மத்தியில் உறுதியாய் இருப்பது மிகக் கடினம். அதிலும் அவர்கள் மத்தியில் தானியேல் தான் எடுத்த தீர்மானத்தில் உறுதியான முடிவை எடுத்து, தலையாரிகளின் தலைவனிடத்தில் அனுமதி கேட்டபோது, தேவன் அனுமதி கிடைக்கச் செய்கிறார்.
தானியேல், அந்நிய தேசத்தில் சிறை பிடித்து கொண்டு போகப்பட்டபோதிலும், தன்னுடைய தீர்மானத்தில் உறுதியாய் இருந்தபோது, தேவன் அவருக்கு அதிகாரிகளின் கண்களில் தயவு கிடைக்கச் செய்கிறார். சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்ற நல்ல நண்பர்களை கொடுத்தார். எல்லாருக்கும் முன்பாக 10 மடங்கு சமர்த்தராய் மாற்றினார். தேசத்தில் பொறுப்பை கொடுத்தார். அதே போல் நீங்களும் உங்கள் தீர்மானத்தில் உறுதியாய் இருக்க முயற்சி செய்யுங்கள். அப்போது தேவன் அதற்கு உதவி செய்வதோடு அளவற்ற ஆசீர்வாதத்தையும் அருளுவார். தீர்மானத்தில் உறுதியாயிருங்கள், எண்ணற்ற ஆசீர்வாதத்தைப் பெறுங்கள்.
- C. ஜாய்ஸ்
ஜெபக்குறிப்பு:-
இம்மாதம் எல்லா பணித்தளங்களிலும் செய்யப்படும் பள்ளி ஊழியங்களுக்காக
ஜெபியுங்கள்
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864