By Village Missionary Movement
Wednesday, 01-Apr-2026இன்றைய தியானம்(Tamil) 01.04.2026
கிட்டி வா
“எழுந்து புறப்பட்டு, தன் தகப்பனிடத்தில் வந்தான்…” - லூக்கா 15:20
நான் ஒரு நாள் என் அறையில் அமர்ந்து வேதம் வாசித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது என் மகன் ஜோ தன் நண்பர்களுடன் என் அறைக்குள் வந்தான். நான், “ஜோ, வெளியே போய் விளையாடு” என்றேன். அவன் சிறிதும் யோசிக்காமல் “டேடி நா உங்க பையன், நீங்க இருக்குற இடத்துலதான இருப்பேன். வேற எங்க போவேன்” என்றான். அப்போது நான் யோசித்தேன் நம் பரம தகப்பனோடு இணைந்து, அவர் இருக்கிற இடத்தில் நாம் இருக்கிறோமா? என்று.
வேதத்திலும் கூட ஒரு தகப்பனுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள். அதில் இளையவன் தகப்பனிடம் ஆஸ்தியில் எனக்கு வரும் பங்கைத் தாருங்கள் எனக் கேட்டு வாங்கி, ஊதாரித்தனமாக செலவழித்து விட்டு, பன்றி தின்னும் தவிடு கூட தன் பசியாற்ற கிடைக்காமல் இருந்தான். தகப்பனுக்கு பங்கை பிரித்துக் கொடுக்கும் போதே தெரியும் தன் மகன் அதை தவறாகத் தான் பயன்படுத்துவான் என்று. ஆனாலும் கொடுக்கிறார். பின் ஒரு நாள் புத்தி தெளிந்து, தன் தகப்பன் வீட்டில் கூலிக்காரருக்கு கூட திருப்தியாய் சாப்பாடு கிடைக்கும். நானோ என் தகப்பன் இல்லாத இடத்தில் இருப்பதால்தான் குறைவுபட்டுள்ளேன். எனவே என் தகப்பனிடத்திற்கு போய், அவருடைய கூலிக்காரரில் ஒருவனாக வேலை செய்து கொள்ளலாம் என நினைத்து திரும்பி வருகிறான். தகப்பனோ தன் மகன் திரும்பி வருவான் என காத்திருக்கிறார். எனவே மகன் வருவதைக் கண்டு, ஓடிப் போய் கட்டி அணைக்கிறார். மகனை மன்னித்து ஏற்றுக் கொள்கிறார். அந்த இளைய குமாரனைப் போல் பரம தகப்பனிடம் திரும்பி வாருங்கள். நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும் அவர் உங்களை ஏற்றுக் கொண்டு உங்கள் குறைவை நிறைவாக்குவார்.
பிரியமானவர்களே, ஒரு வேளை இதை வாசிக்கும் நீங்கள் கூட கஷ்டத்தில், தாழ்வில், குறைவில் இருக்கிறீர்களா? உங்கள் பரம தகப்பன் உங்களோடு இருக்கிறாரா? என்று ஒரு நிமிடம் யோசியுங்கள். நீங்கள் புத்தி தெளிந்து அவரண்டை வருவீர்கள் என்று பரம தகப்பன் ஆவலோடு காத்திருக்கிறார். நீங்கள் உங்கள் தவறை உணர்ந்து மனந்திரும்பி வரும் போது, பரம தகப்பன் ஆவலோடு ஏற்றுக் கொள்கிறார். அதோடு மாத்திரமல்ல, உங்கள் பாவ அழுக்கான வஸ்திரத்தைக் களைந்து, இரட்சிப்பின் புது வஸ்திரம் தந்து, தன் பிள்ளையாய் அதிகாரமென்னும் மோதிரம் தந்து, கால்கள் வழுவாமல் அவர் பாதை செல்ல பாதரட்சை தந்து உங்கள் குறைவை நிறைவாக்குவார். நீங்கள் கேட்காமலேயே இவற்றை எல்லாம் தருவார். “அப்பா” ன்னு கிட்டி வந்தா மட்டும் போதும். நீங்கள் எந்த நிலையிலிருந்தாலும் உங்களை ஏற்றுக் கொண்டு, அரவணைத்துக் கொள்ளுவார்.
Bro. டேவிட் கணேசன்
ஜெபக்குறிப்பு:-
இம்மாத ஊழியங்களுக்காக, ஊழியர்களின் பிரயாண பாதுகாப்பிற்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864