By Village Missionary Movement
Saturday, 04-Apr-2026இன்றைய தியானம்(Tamil) 03.04.2026
புனித வெள்ளி
“...ஒருவனுடைய ஜநநநாளைப் பார்க்கிலும் மரண நாளும் நல்லது" - பிரசங்கி 7:1
ஒருவருடைய பிறப்பு நாளை விட, அவரது இறப்பு நாள் முக்கியமானது. இயேசு கிறிஸ்து சிலுவையில் மரணம் அடைந்த இந்த புனித வெள்ளிக்கிழமையை பாரம்பரிய திருச்சபைகளில் சிறப்பாய் நினைவு கூறுவார்கள். இயேசு கிறிஸ்து சிலுவையில் தொங்கிய போது சொன்ன ஏழு வசனங்களை குறித்து தியானிப்பார்கள். இவைகளை சிலுவையில் பூத்த ஏழு பூக்கள் என்றும் சொல்லலாம்.
1. மன்னிப்பு: இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை முழுவதுமே மன்னிப்பின் குணத்தால் நிறைந்திருந்ததால், தம்மை சிலுவையில் அறைந்தவர்களுக்காய் பெருந்தன்மையாய் “பிதாவே இவர்களுக்கு மன்னியும்”என்று ஜெபிக்க முடிந்தது. ஸ்தேவானும் ஆண்டவரை அப்படியே பின்பற்றினார். நம்மிடம் இந்த மன்னிப்பின் குணம் இருக்கிறதா?
2. இரட்சிப்பு: இயேசு கிறிஸ்துவின் வாழ்வில் ஆத்தும ஆதாயமே பிரதான பணியாய் இருந்தது. பாவிகளை இரட்சிக்கவே அவர் இவ்வுலகத்திற்கு வந்ததினால், தன்னுடைய தவறுக்காக மனமுடைந்த கள்வனை நோக்கி: “இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய்” என்று கடைசி நொடி பொழுதிலும் கள்வன் ஒருவனுக்கு இரட்சிப்பை கட்டளையிட்டார்.
3. அன்பு: இயேசு கிறிஸ்துவுக்கு தன் தாயின் மீது கரிசனை இருந்ததால் யோவானிடம் “அதோ, உன் தாய்” என்று சொல்லி தாயை கவனிக்கும் பொறுப்பை கொடுக்கிறார் பாருங்கள். பெற்றோரை முதிர் வயதிலும் நேசித்து கவனிக்கும் அன்பு நம் உள்ளத்தில் உண்டா?
4 அங்கலாய்ப்பு: இயேசு கிறிஸ்து கைவிடப்பட்ட சூழ்நிலையை நமக்காக ருசி பார்த்தார். தேவனை நோக்கி, “என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்” என்றார். இன்றைக்கும் கைவிடப்பட்ட சூழ்நிலையில் இருக்கும் உங்களுடைய வேதனை அவருக்கு புரியும் கலங்காதீர்கள்.
5. தவிப்பு: இயேசு கிறிஸ்து “தாகமாயிருக்கிறேன்” என்றார். இது ஆத்துமாக்களை குறித்த தாகம். இன்றைக்கும் அவர் தாகமாய் தான் இருக்கிறார். ஆண்டவரின் தாகத்தை தீர்க்க ஆத்துமாக்களை அவரண்டை கொண்டு வருவீர்களா?
6. முடிப்பு: ஆண்டவர் இயேசு பிதா கொடுத்த எல்லா வேலையையும் பூரணமாக முடித்து, “முடிந்தது” என்றார். அப்போஸ்தலனாகிய பவுலும் நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன் என்று கூறுகிறார். நாமும் தேவ சித்தத்தின்படி வாழ்ந்து வெற்றியாய் ஓடி முடிப்போம்.
7. ஒப்படைப்பு:“பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்” என்று கூறி ஜீவனை விட்டார். இது ஒவ்வொரு யூத குடும்பத்திலும் இரவு படுக்கும் போது ஜெபிக்கிற ஜெபம்.
சிந்திப்போம் ! நாமும் தேவசித்தம் நிறைவேறும்படி வாழ்வோம்.
- Rev.S.ஜோதிநாயகம்
ஜெபக்குறிப்பு:-
திருச்சி அரியலூரில் கட்டப்படும் மிஷனெரி வீட்டிற்காக ஜெபியுங்கள்
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864