By Village Missionary Movement
Monday, 06-Apr-2026இன்றைய தியானம்(Tamil) 06.04.2026
உறுதியான விசுவாசம்
"விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்;.." - எபிரெயர் 11:6
இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்த செய்தியை, அவரை பின்பற்றின சீஷர்கள், உடனிருந்தவர்கள் கூட நம்பவில்லை. அவர்களுடைய விசுவாசம் ஆட்டம் கண்டது. எம்மாவூர் சீஷர்கள் தங்களோடு பேசிக்கொண்டு வருபவர் உயிர்த்தெழுந்த இயேசு என்று அறிந்து கொள்ளவில்லை. அதாவது உயிர்த்தெழுதலை குறித்த தீர்க்கதரிசனங்களை அவர்கள் நம்பவில்லை. எனவே அவர்களை வேத வசனங்களை விசுவாசியாத மந்த இருதயமுள்ளவர்கள் என்று இயேசு கடிந்து கொண்டார் (லூக்கா 24:25). மகதலேனா மரியாளும், எம்மாவூர் சீஷரும் இயேசு உயிர்த்தெழுந்துவிட்டதை அறிவித்தபோது மற்ற சீஷர்கள் அதை நம்பவில்லை. அவர்களது அவிசுவாசத்தையும், கடின இருதயத்தையும் இயேசு கடிந்து கொண்டார், “காணாமல் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள்” என்று தோமாவிடம் கூறினார். ஏனென்றால் "விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது." (எபிரெயர் 11:1)
பேதுருவும் அவனோடிருந்த மற்ற சீஷரும் தங்கள் அழைப்பை மறந்து, பின்மாற்றமடைந்து மீன்பிடிக்கச் சென்று விட்டனர் (யோவான் 21:3). சுமார் மூன்றரை வருடங்கள் இயேசுவோடு கூட இருந்தவர்கள், மரித்து உயிரோடெழுவேன் என்று அவர் கூறிய வார்த்தைகளை கேட்டவர்கள், மரித்தோரை அவர் உயிர்த்தெழச் செய்த அற்புதங்களையெல்லாம் கண்டவர்கள், போராட்ட காலத்தில் தங்கள் விசுவாசத்தில் பெலவீனப்பட்டு போனார்கள். இயேசுவோ அவர்கள் விசுவாசத்தைப் பெலப்படுத்த மூன்றாம் விசை தரிசனமாகி, அவர்கள் பசியை ஆற்ற அப்பமும் மீனும் கொடுத்து, வலை கிழியத்தக்கதாக மீன்கள் கிடைக்கும்படி செய்து, அவர்கள் தன்னை இயேசு என்று அறியும் படி செய்தார்.
மேற்கண்டவர்களைப்போல் இராமல், உறுதியான விசுவாசமுள்ளவர்களாய் இருந்தவர்கள் வேதத்தில் உண்டு. வேத வார்த்தைகளையும், வாக்குத்தத்தங்களையும் விசுவாசித்து, போராட்ட நேரங்களில் இம்மையில் வெற்றி வாழ்க்கை வாழ்ந்து, மறுமையில் நித்திய ஜீவனைப் பெற்றுக் கொள்வது தேவ சித்தமாயிருக்கிறது. இத்தகைய உறுதியான விசுவாசம் தானியேலுக்கும் அவர் தோழர்களுக்கும் இருந்தது.
தேவபிள்ளைகளே! இன்றும் ஆண்டவர் உங்கள் விசுவாசத்தை பெலப்படுத்த விரும்புகிறார். போராட்ட நேரத்தில், பேதுருவின் விசுவாசம் ஒழிந்து போகாமல் பிதாவை நோக்கி வேண்டிக்கொண்டவர், நமக்கும் நம் அவிசுவாசம் நீங்க உதவி செய்வாராக. ஆமென்.
- Mrs. கீதா ரிச்சர்ட்
ஜெபக்குறிப்பு:-
ஜார்கண்ட்டில் ஆலயமில்லாத பகுதிகளில் ஆலயம் கட்டப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864