By Village Missionary Movement
Thursday, 09-Apr-2026இன்றைய தியானம்(Tamil) 09.04.2026
கலக்கம் துதியாக மாறியது
“கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள் என்றான்” - யாத். 14:14
இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தில் 400 ஆண்டுகளுக்கு மேலாக அடிமையாக இருந்தார்கள். எகிப்தியர், இஸ்ரவேல் ஜனங்களை இரவும் பகலும் சுமைசுமக்கிற வேலையினால் ஒடுக்கும்படிக்கு, அவர்கள்மேல் விசாரணைக்காரரை வைத்தார்கள். இஸ்ரவேல் புத்திரரைக் கொடுமையாய் வேலைவாங்கினார்கள். இவர்களை காப்பாற்ற மோசேயை தெரிந்து கொண்டார் தேவன். ஆனால் பார்வோனின் இருதயமோ கடினமாக இருந்தது. இதனாலே 10 வாதையினாலே எகிப்தியர்களின் கண் முன் பிரமிக்கத்தக்க காரியங்களைச் செய்தார் தேவன். அதனால் பார்வோன் இஸ்ரவேல் ஜனங்களை விடுவித்தான். இஸ்ரவேல் ஜனங்கள் அணியணியாய் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டனர்.
போகிற வழியில் இஸ்ரவேல் ஜனங்களுக்கு முன்பாக செங்கடல் இருந்தது. பின்புறம் எகிப்தின் படைவீரர்கள் அவர்களை பின்தொடர்ந்து வந்தனர். அதனால் அவர்கள் மிகவும் பயந்து, மோசேயை நோக்கி: எகிப்திலே பிரேதக்குழிகள் இல்லையென்றா வனாந்தரத்திலே சாகும்படிக்கு எங்களைக் கொண்டுவந்தீர்? எங்களுக்கு இப்படி செய்தது என்ன? நாங்கள் வனாந்தரத்திலே சாகிறதைப்பார்க்கிலும் எகிப்தியருக்கு வேலைசெய்கிறது எங்களுக்கு நலமாயிருக்குமே என்று புலம்ப ஆரம்பித்தார்கள். அப்பொழுது மோசே ஜனங்களைப் பார்த்து பயப்படாதிருங்கள், இன்றைக்கு கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள். இன்றைக்கு நீங்கள் காண்கிற எகிப்தியரை இனி என்றைக்கும் காணமாட்டீர்கள். கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள் என்றார். மோசே தன் கையில் உள்ள கோலை ஓங்கி, சமுத்திரத்தின்மேல் நீட்டினார். அப்பொழுது சமுத்திரம் இரண்டாகப் பிரிந்தது. ஜனங்கள் எல்லோரும் செங்கடல் நடுவில் நடந்து சென்றார்கள். எல்லோரும் கடந்த பிறகு எகிப்தின் படைகள் செங்கடல் நடுவே வந்தது. அப்பொழுது கர்த்தர் செங்கடலை மூடினார். எகிப்தின் படைகள் அனைத்தும் கடலில் மூழ்கியது. ஒருவர் கூட தப்பவில்லை. ஆரோனின் சகோதரியாகிய மிரியாம் தன் கையிலே தம்புரை எடுத்துக்கொண்டாள். இஸ்ரவேல் ஜனங்களிலுள்ள ஸ்திரீகள் எல்லோரும் சேர்ந்து தேவனை துதித்துப் பாடினார்கள்.
நம்முடைய வாழ்வில், தேவன் நம்மை நடத்திச் செல்லும் பாதையில் செல்லும் போது, வரும் பாடுகள், துன்பங்கள், பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் அவர் பார்த்துக்கொள்வார். நாம் சும்மா இருந்தால் போதும், கர்த்தர் நமக்காக யுத்தம் செய்வார். நாம் நம்முன் செல்லும் தேவ சமுகத்தை விசுவாசித்து முன்நடந்தால் போதும். அப்படி செய்யும் போது நம் உள்ளத்திலுள்ள கலக்கங்கள் எல்லாம் துதியாக மாறும்.
- Bro. A. கெவன் ஜேக்கப்
ஜெபக்குறிப்பு:-
நம்மோடு இணைந்துள்ள தோழமை ஊழியர்களை தேவன் வல்லமையாய் பயன்படுத்த ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864