By Village Missionary Movement
Saturday, 25-Apr-2026இன்றைய தியானம்(Tamil) 25.04.2026
சங்கடமான சூழ்நிலை
"...கர்த்தர் திரும்பி, பேதுருவை நோக்கிப்பார்த்தார்..." - லூக்கா 22:61
ஒரு மாணவன் முழு ஆண்டுத் தேர்வில் அனைத்துப் பாடங்களிலும் தோல்வி அடைந்தான். தலைமை ஆசிரியருக்கு கோபம் வந்து விட்டது. இந்தப் பள்ளியில் பத்து வருஷமா படிச்சிருக்க, ஒரு பாடத்துல கூட பாஸ் ஆகல, வகுப்புல பாடம் நடத்தும் போது நீ என்ன காதில் பஞ்சு வெச்சு அடைச்சிக்கிட்டிருந்தியான்னு கோபமாக திட்டினார். அந்தப் பையன் அமைதியாக நின்றிருந்தான். இனி நீ படிக்க லாயக்கே இல்லை என்று T.C கொடுத்து அனுப்பி விட்டார். உன் காதில் என்ன பஞ்சு வெச்சா அடைச்சுவச்சிருக்க என்ற அந்த வார்த்தை அவன் காதுகளில் மீண்டும் மீண்டும் ஒலித்துக்கொண்டே இருந்தது. தன் காதுகள் இரண்டையும் நன்றாக மூடினான். அமைதியான இந்த உலகம் அவனுக்கு வித்தியாசமாகத் தெரிந்தது. புதிய சிந்தனை உருவானது. தலைமை ஆசிரியர் சொன்னது போல் பஞ்சு வைத்து காதை அடைத்துப் பார்த்தான். ஒரு புது சாதனத்தை வடிவமைத்தான். அதன் பெயர் தான் இயர் மஃப். பரீட்சைக்கு படிக்கிறவர்கள் தொந்தரவின்றி படிக்க அதை வாங்கினார்கள். இரைச்சலான இடங்களில் வேலை செய்பவர்களும் அதை வாங்கினார்கள். ஓரளவுக்கு வியாபாரமும் நடந்தது. அந்த சமயம் முதலாம் உலகப்போர் ஆரம்பமானது. பீரங்கி சத்தத்தினால் காது செவிடாகாமல் தடுக்க இயர் மஃப் கட்டாயம் அணிய வேண்டும் என அதிகாரி உத்தரவிட்டார். போர் வீரர்களுக்கு வசதியாக ஹெல்மெட்டில் அதை வடிவமைத்து கொடுத்தார், கோடீஸ்வரரானார். அவர் தான் செஸ்டர் கிரீன்வுட். அவர் சந்தித்த கடினமான சூழ்நிலைதான், ஒரு புதிய கண்டுபிடிப்பிற்கு வழி வகுத்தது.
இயேசு கிறிஸ்துவின் 12 சீஷர்களில் ஒருவரான பேதுருவின் வாழ்விலும் வந்த சங்கடமான சூழ்நிலை அவரது வாழ்க்கையில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்தது. இயேசுவானவர் பூமியில் ஊழியம் செய்த நாட்களில் உடன் இருந்தவர் பேதுரு. ஆனால் இயேசுவின் கடைசி பயணத்தின் போது இயேசுவை யார் என்று தெரியாது என மறுதலிக்கவும் செய்தார். அவ்வாறு சொன்னவுடனே சேவல் கூவிற்று. அப்பொழுது கர்த்தர் திரும்பி, பேதுருவை நோக்கிப் பார்த்தார். சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாய் என்று கர்த்தர் தன்னிடத்தில் சொன்ன வசனத்தை உடனே பேதுரு நினைவு கூர்ந்து வெளியே போய் மனங்கசந்து அழுதார். இந்த சங்கடமான சூழ்நிலை பேதுருவை ஒரு நொறுங்குண்ட மனிதனாக மாற்றி, கிறிஸ்துவுக்காக வைராக்கியமாய் கடைசி வரை நிற்கச் செய்தது.
இதை வாசிக்கின்றதான பிரியமானவர்களே, செஸ்டர் கிரீன்வுட் தன்னுடைய வாழ்க்கையில் சங்கடமான சூழ்நிலையில் கிடைத்த யோசனையை சரியான முறையில் பயன்படுத்தி சாதனை படைத்தார். இயேசுவும் சங்கடமான சூழ்நிலையில் பேதுருவை நோக்கிப் பார்த்தார். அந்த சூழ்நிலை தான் பேதுருவின் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை கொண்டு வந்தது. நம்மில் அனேகர் எப்படிப்பட்ட சூழ்நிலையை எதிர்கொண்டிருக்கிறோம்? அந்த சூழ்நிலையினிமித்தம் மனம் தளராமல், அதை புதிய சிந்தனைக்கு நேராக நாம் திருப்புவோமென்றால் புதிய வழி பிறந்து, புதிய பாதையில் நடந்து புதிய சிந்தனை உருவாக்க இடம் கொடுப்போம். வாழ்வில் வெற்றி பெறுவோம்!
- Bro.T. சங்கர் ராஜ்
ஜெபக்குறிப்பு:-
கிராமங்களில் கொடுக்கும் கைப்பிரதிகளின் தேவைக்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864