By Village Missionary Movement
Thursday, 21-May-2026இன்றைய தியானம்(Tamil) 21.05.2026
மனந்திரும்புங்கள்
"மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது..." - மத்தேயு 3:2
மலைக்காடுகளில் உள்ள மிருகங்கள் சில வேளைகளில் தாங்கள் இருக்கும் இடத்தை விட்டு இன்னும் மேடான பகுதியை நோக்கி விரைந்து செல்லும். இது நில அதிர்வு ஏற்படும் என்ற அபாயத்தை முன்னறிவிக்கும். அவ்வாறு சென்று தன்னையும், தன் இனத்தையும் பாதுகாக்கும். இச்செயல் அவற்றின் ஜாக்கிரதையான நடத்தையை காட்டுவதோடு, உடனடியாக செயல்படும் அவற்றின் நுண்ணறிவையும் வெளிப்படுத்துகிறது. பறவைகளும், மரத்தில் வாழும் அணில்களும் கூட எதிரியைக் கண்டு விட்டால், ஒரு பதற்றத்துடன் கூடிய ஒலியை எழுப்பி எச்சரிப்பை வெளிப்படுத்தும். இந்த ஒலியை கேட்டு மற்ற பறவைகளும் மருண்ட பார்வையுடன் எதிரியை இனங்கண்டு, தங்களை பாதுகாத்துக் கொள்ளும். இப்படி எச்சரிப்புகளை ஐந்தறிவு மிருகங்கள் கூட அறிந்து தன்னை காத்துக் கொள்கின்றன.
வேதத்தில் மாற்கு 3 ஆம் அதிகாரத்தில் யோவான் ஸ்நானன் யூதேயாவின் வனாந்தரத்தில் வந்து: மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கம் பண்ணினார். அநேகர் தன்னிடத்தில் ஞானஸ்நானம் பெற வருகிறதை அவன் கண்டு: விரியன் பாம்பு குட்டிகளே! வருங்கோபத்துக்குத் தப்பித்துக் கொள்ள உங்களுக்கு வகைகாட்டினவன் யார்? மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள் என்றார். மனிதர்களாகிய நாம் வேதத்தின் எச்சரிப்புகளை அறிந்த பின் நம் நிலையை விட்டு மனந்திரும்பி ஆயத்தப்படுகிறோமா? அல்லது நிர்விசாரமாக மாறுபாடான வழியில் பயணிக்கிறோமா? ஆராய்ந்து பார்க்கும் தருணம் இதுவே.
அன்பான தேவ ஜனமே, நீதி.29:1 ல் "அடிக்கடி கடிந்துகொள்ளப்பட்டும் தன் பிடரியைக் கடினப்படுத்துகிறவன் சகாயமின்றிச் சடிதியில் நாசமடைவான்" என்ற எச்சரிப்பின் வசனத்தைக் காண்கிறோம். நம் கிரியைகள் எப்படி இருக்கிறது? ஆராய்ந்து சீர்பொருந்தி, இயேசுவின் வருகையிலே எதிர் கொண்டு போக நம்மை தகுதிப்படுத்திக் கொண்டு ஆயத்தமாவோம்.
- Mrs. எமீமா சௌந்தரராஜன்
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864