By Village Missionary Movement
Friday, 22-May-2026இன்றைய தியானம்(Tamil) 22.05.2026
மனமேட்டிமை
"அழிவுக்கு முன்னானது அகந்தை; விழுதலுக்கு முன்னானது மன மேட்டிமை." - நீதி.16:18
மிக அழகாகப் பாடக்கூடியவள் சாந்தா. இனிமையான குரலில் பாடக்கூடியவள் என்றும் பல இன்னிசை போட்டிகளில் பரிசுகள் வாங்கினவள் என்றும் எல்லோராலும் புகழப்பட்டவள். புனிதா, பள்ளிப் போட்டிகளில் பங்கு பெற்று பரிசுகள் வாங்காவிட்டாலும் ஆலயத்தில், ஓய்வு நாள் பள்ளியில் நடைபெற்ற போட்டிகளில் பங்கு பெற்று பரிசுகள் வென்றுள்ளாள். ஒருமுறை பள்ளியில் மாநில அளவில் நடைபெற்ற இசைப் போட்டியில் பங்கு பெற புனிதா, சாந்தா இருவரும் தங்கள் பெயர்களை கொடுத்தார்கள். சாந்தா தன் தோழிகளிடம், இவள் குரலைப் பாருங்கள், பாட்டுப் போட்டியில் கலந்து கொள்ள என்ன தகுதியிருக்கிறது? என்று புனிதா காது கேட்கும் படி கூறினாள். நான் தான் புனிதாவை வென்று ரூ.10,000 முதல் பரிசு வெல்லுவேன் என்றாள் பெருமையோடு. புனிதாவோ பதில் ஒன்றும் சொல்லாமல் அமைதியாகச் சென்று விட்டாள். போட்டி அன்று ஜெபம் செய்து கொண்டே தேவபிரசன்னத்தோடு பாடி முதல் பரிசை வென்றாள் புனிதா. தேவனாலே கூடாதகாரியம் ஒன்றுமில்லை. சாந்தாவுக்கோ ஆறுதல் பரிசு கூட கிடைக்கவில்லை. அவர் பலவான்களை ஆசனங்களிலிருந்து தள்ளி, தாழ்மையானவர்களை உயர்த்துபவர் என்பதை உணர்ந்தாள்.
வேதத்தில் தன் பதினாறு வயதிலேயே ராஜாவான யூத ராஜா உசியா, தன் தகப்பன் அமத்சியாவைப் போல் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்ததினிமித்தம் கர்த்தர் அவரை உயர்த்தினார். பெலிஸ்தியர், அம்மோனியர், அரபியர், மெகுனியரை வென்றதால் திரளான காணிக்கைகள் வந்தன. பள்ளத்தாக்குகளிலும், சமவெளிகளிலும் பல திராட்சைத் தோட்டங்களை உருவாக்கினார். பராக்கிரமத்தோடே யுத்தம் பண்ணுகிற மூன்று லட்சத்து ஏழாயிரத்து ஐந்நூறு பேர் கொண்ட சேனை இருந்தது.
அவன் பலப்பட்டபோது, தனக்குக் கேடுண்டாகும் மட்டும் அவனுடைய மனம் மேட்டிமையாகி, ஆசாரியர்கள் எச்சரித்த போதும் மேட்டிமையோடு தூபபீடத்தில் தூப கலசத்தை பிடித்து நின்ற போது, உசியா ராஜாவின் நெற்றியிலே குஷ்டரோகம் தோன்றிற்று. அவனைத் தீவிரமாய் வெளியேற்றினர். ஐம்பத்திரண்டு ஆண்டுகள் ராஜாவாய் மதிக்கப்பட்டவன் மனமேட்டிமையடைந்த ஒரு நொடிப் பொழுதில் ஆலயத்திற்குப் புறம்பாகி ஒரு தனித்த வீட்டில் வாசம் பண்ணினான்.
அன்பான தேவ ஜனமே, பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார்; தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்" (1 பேதுரு 5:5). மனுஷனுடைய அகந்தை அவனைத் தாழ்த்தும், மனத் தாழ்மையுள்ளவனோ கனமடைவான். கர்த்தருக்கு முன்பாக நாம் தாழ்மைப்படும்போது அவர் நம்மை உயர்த்துவார். ஆகையால் ஏற்றகாலத்திலே தேவன் நம்மை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருப்போம். மேன்மைக்கு முன்னானது தாழ்மை.
- Mrs. ஜாஸ்மின் பால்
ஜெபக்குறிப்பு:-
VBS ஊழியத்திற்கு ஏற்ற கால சூழ்நிலை காணப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864