By Village Missionary Movement
Tuesday, 02-Jun-2026இன்றைய தியானம்(Tamil) 02.06.2026
பிள்ளைகள் ஆசீர்வதிக்கப்பட
“பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்” - நீதி. 22:6
ஒரு கிறிஸ்தவ ஆசிரியப் பெற்றோருக்குப் பிறந்த நானும், எனது சகோதரியும் ஆண்டவருடைய பெரிதான கிருபையினால் எங்களது பெற்றோரின் கண்டிப்பு, அன்பு மற்றும் முன்மாதிரியுள்ள வாழ்க்கை முறையினாலே நன்கு வழிநடத்தப்பட்டோம். அவர்கள் சந்தித்த சவால்கள், வாழ்க்கைப்போராட்டங்கள் மூலம், நாங்கள் செய்ய வேண்டியது மற்றும் செய்யக்கூடாதது ஆகிய இரண்டையும் கற்றுக்கொண்டோம். எங்கள் தகப்பனார் ஆசிரியப் பணியோடு கூடிய ஆலய உபதேசியார் பொறுப்பிலும் ஈடுபட்டிருந்தார்கள். ஆகவே அவர்கள் அன்பினாலே, தன்னுடைய ஊழியங்களின் மூலமாக எங்களுக்குப் பார்த்து பழகும்படியாக வாழ்க்கைப்பாடங்களைக் கற்றுக்கொடுத்தார்கள். எங்களை இரவு ஜெபங்கள், மிஷனெரி தரிசனக் கூடுகைகள், வேதாகமத் தேர்வுகள், இசைப்பயிற்சிகள் மற்றும் உறவினர்களின் இல்லங்களுக்கு அழைத்துச் சென்று சமூக நடைமுறைகளைப் பயிற்றுவித்தார்கள். எங்கள் தாயார் கண்டிப்பானவர்கள். ஒழுக்கநெறிகள், உடையணியும் விதங்கள் மற்றும் பணத்தை, நேரத்தை, பொறுப்புகளை உண்மையாய்க் கையாளுதல் போன்றவற்றைக் கற்றுக்கொடுத்தார்கள்.
இந்தக் காரியங்கள் அனைத்தும் என்னையும், என் சகோதரியையும். எல்லாவற்றிலும் கர்த்தருக்குப் பயப்படுதலினால் வாழ்வின் எல்லா சவால்களையும் ஆண்டவரோடு இணைந்து சந்தித்து, ஜெயிக்கக் கற்றுக்கொண்டோம். அதையே எங்கள் பிள்ளைகளுக்கும், நாங்கள் போதித்து வழிநடத்துகிற சிறுவர்கள் மற்றும் வாலிபர்கள் மற்றும் பெரியவர்களுக்கும் கற்றுத்தருகிறோம். சங். 103:17 ல் சொல்லப்பட்டிருக்கிறபடி, “கர்த்தருடைய கிருபையோ அவருக்குப் பயந்தவர்கள்மேலும், அவருடைய நீதி அவர்கள் பிள்ளைகளுடைய பிள்ளைகள்மேலும் அநாதியாய் என்றென்றைக்கும் உள்ளது” என்ற வாக்கியம் எங்கள் வாழ்வில் அப்படியே நிறைவேறியுள்ளது.
ஆகவே புதிய கல்வியாண்டில் பிரவேசித்திருக்கிற நம்முடைய சிறுபிள்ளைகள், இளம் வாலிபர்கள் ஆசீர்வதிக்கப்படும்படி அவர்களை வளர்க்கிற பெற்றோர்கள், முதியவர்கள் மற்றும் அவர்களை வழிநடத்துகிற ஆசிரியர்களாக, போதகர்களாக உள்ள நாம், முன்மாதிரியுள்ள வாழ்க்கை வாழவும் கர்த்தருக்குப் பயப்படுதலைப் போதிக்கவும், பிள்ளைகளின் படிப்பு மற்றும் பிறதாலந்துகளின் வளர்ச்சிக்கேதுவானவைகளைத் தொடர்ந்து கண்காணிக்கவும் அர்பணிப்போம்.
இந்த கல்வியாண்டு நம் பிள்ளைகளுக்கும், அடுத்தத் தலை முறையினருக்கும் ஆசீர்வாதமான ஆண்டாக அமைய ஜெபிப்போம், வாழ்த்துகிறோம். கர்த்தர் கொடுத்த தரிசன திட்டத்திலே கர்த்தர் தாமே நம் பிள்ளைகளை நிலைநிறுத்தி ஆசீர்வதிப்பாராக.
- Mrs. மெர்ஸி அலெக்ஸாண்டர்
ஜெபக்குறிப்பு:-
நமது ஊழியர்களின் பிள்ளைகளுடைய கல்வி தேவைகளுக்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864