By Village Missionary Movement
Thursday, 11-Jun-2026இன்றைய தியானம்(Tamil) 11.06.2026
கடவுளுக்கு என் பங்கு என்ன?
"...உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்" - 2 கொரி. 9:7
ஒருவர் தனது சம்பள பணத்தை வாங்கிக் கொண்டு வந்து அதை ஒரு பெட்டியில் போட்டு வைத்தார். நள்ளிரவான போது 500 ரூபாய் நோட்டுகளெல்லாம் துள்ளிக் குதித்து நடனம் ஆடி, பாடத் துவங்கின. 'நாங்கள் சூப்பர் மார்க்கெட்டுக்கு போகிறோமே, நாங்கள் சூப்பர் மார்க்கெட்டுக்கு போகிறோமே' என்று. அப்பொழுது 100 ரூபாய் நோட்டுகள் சுத்தி சுத்தி வளைந்து ஆடி, 'நாங்கள் பள்ளிக்கு போகிறோமே, நாங்கள் பள்ளிக்கு போகிறோமே' என்று கீதம் பாடின. இதைப் பார்த்த 10 ரூபாய் நோட்டுகளும், 'நாங்கள் கடைக்கு போகிறோமே, நாங்கள் கடைக்கு போகிறோமே' என்று சிரித்தன. அப்பொழுது எல்லாரும் வெளியே போகிறார்கள் என்று சில்லறை காசுகள் மிகவும் துக்கமாயின. 500 ரூபாய் நோட்டுகள் பொருட்கள் வாங்கவும், 100 ரூபாய் நோட்டுகள் பள்ளி கட்டணம் கட்டவும், 10 ரூபாய் நோட்டுகள் காய்கறிகள் வாங்கவும் செல்கின்றன. நாம் எங்கே போக போகிறோம் என்று மிகவும் சோகமாக இருந்தன. திடீரென சில்லறை காசுகள் முகம் மலர்ந்து, 'நாங்கள் ஆலயத்திற்கு போகிறோமே' என்று சிரித்தன.
எனக்கு அன்பான தேவபிள்ளைகளே, புரிகிறதா? இன்று நாம் இயேசப்பாவுக்கு எதை கொடுக்க போகிறோம்? ரூ.500, ரூ.100, ரூ.10, அல்லது சில்லறையா எவைகள்? வேதம் சொல்கிறது உற்சாகமாய் கொடுக்கிறவனிடத்தில் கர்த்தர் பிரியமாயிருக்கிறார். நான் 20 ஆண்டுகளுக்கு மேலாக சபை ஊழியம் செய்து வருகிறேன். காணிக்கை பெட்டியை திறக்கும் போது பால்காரர், ரிக்க்ஷாக்காரர், ஆட்டோக்காரர் வாங்காத கிழிந்த ரூபாய் நோட்டுகள் காணிக்கை பெட்டியில் இருப்பதை பார்த்திருக்கிறேன். இதைத்தான் மல்கியா தீர்க்கதரிசி புத்தகத்தில் எழுதியுள்ளது நல்லதை வைத்துக் கொண்டு "பீறுண்டதையும், கால் ஊனமானதையும், நசல்கொண்டதையும் கொண்டுவந்து காணிக்கையாகச் செலுத்துகிறீர்கள்" என்கிறார் (மல்கியா 1:13).
கர்த்தருக்கேற்ற காணிக்கை முதல் பழுத்த பழம், முதலீற்று, நல்ல ரூபாய் நோட்டுகள். நாம் யாருக்கு, எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். தேவனுக்கா, அல்லது மற்ற காரியங்களுக்கா? நாம் எதை விதைக்கிறோமோ அதையே தான் அறுப்போம். கர்த்தருக்கே முதலிடம், முதல் தரம். தேவன் அதை ஏற்றுக் கொள்வார். காயீன் முதல் தரம் கொடுக்கவில்லை. ஆபேல் முதல் தரம் கொடுத்தார். கர்த்தர் அந்த காணிக்கையை ஏற்றுக் கொண்டார். நாம் செலுத்தியதை கர்த்தர் ஏற்றுக் கொண்டால்தான் அது நமக்கு ஆசீர்வாதம். கர்த்தருக்கே முதலிடம் கொடுப்போம். கர்த்தர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக.
- Mrs. எப்சிபா இம்மானுவேல்
ஜெபக்குறிப்பு:-
இந்தியா முழுவதும் ஒரு லட்சம் கிராமங்களை சந்திக்க ஜெபியுங்கள்
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864