By Village Missionary Movement
Friday, 12-Jun-2026இன்றைய தியானம்(Tamil) 12.06.2026
மன்னிப்பு
"...கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்" - கொலோ.3:13
மகாத்மா காந்தி சிறையிலிருந்த போது, ஸ்மட்ஸ் என்ற கொடிய ஜெயிலர் எல்லா கைதிகளையும் அடிப்பார். ஆனால் காந்தி மட்டும் அடிக்கப்படும் போது ஒரு பெயரை சொன்னது அவரை யோசிக்க வைத்தது. அன்று முதல் காந்தியை அடிப்பதை நிறுத்தினார். ஒருநாள் ஸ்மட்ஸ் காந்தியிடம், மிஸ்டர் காந்தி என்று பணிவாக அழைத்து, நான் உங்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். உங்களுக்கு என்ன வேண்டும் என்றார். காந்தியும் எனக்கு புத்தகம் கொடுங்கள் என்று கேட்டு பெற்றுக்கொண்டார். அன்று முதல் இருவரும் நண்பர்களானார்கள். காந்தியின் விடுதலை நாளில் சிறையில் தைத்த பூட்சை ஸ்மட்ஸ் க்கு பரிசாகக் கொடுத்தார் காந்தி. ஆவலோடு அணிந்து பார்த்து, இவ்வளவு துல்லியமாக தைக்க என் கால்களின் அளவு உங்களுக்கு எப்படி கிடைத்தது என்று கேட்டார். காந்தி தனது மார்பு துண்டை அகற்றி, நீங்கள் என்னை பூட்ஸ் காலால் உதைத்த போது ஏற்பட்ட வடுக்களை அளந்து தான் தைத்தேன் என்றார். ஸ்மட்ஸ், காந்தியிடம் கண்ணீரோடு நான் மிருகம்! கொடிய மிருகம்! என்னை மன்னித்து விடுங்கள். காந்தியின் மன்னிக்கின்ற குணம் அவரை மென்மையான மனிதனாக மாற்றியது.
புதிய ஏற்பாட்டில் பேதுரு இயேசுவிடம் வந்து: ஆண்டவரே, என் சகோதரன் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து வந்தால், நான் எத்தனை தரம் மன்னிக்க வேண்டும்? ஏழு தரமட்டுமோ என்று கேட்டான். அதற்கு இயேசு ஏழுதரமாத்திரம் அல்ல; ஏழெழுபதுதரமட்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன். நீங்கள் அவனவன் தன் தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாய் மன்னியாமற்போனால், என் பரம பிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார் என்றார். அப்.பவுல் எபேசியருக்கு எழுதின நிருபத்தில், சகல விதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும் மற்ற எந்த துர்க்குணமும் உங்களை விட்டு நீங்கக்கடவது. ஒருவருக்கொருவர் தயவாயும் மன உருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்தது போல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள் என்றார்.
இதை வாசிக்கின்றதான தேவ ஜனமே, நம்முடைய பாவங்களை இயேசு தம் இரத்தத்தால் கழுவினது மாத்திரமல்ல மன்னித்தும் விட்டார். எனவே நாமும் மற்றவர்களை மன்னிக்க வேண்டும். இன்றைக்கு அநேக குடும்பங்களில், உறவுகளில் மன்னிக்கிற குணம் இல்லை. அதுதான் பிரிவினைகள், மோதல்கள் ஏற்படுவதற்கான காரணம். நாம் பிறர் குற்றங்களை மன்னிக்க முயற்சி செய்வோம். அன்னை தெரசா கூறும்போது, தண்டனை கொடுப்பதற்கு தாமதம் செய். மன்னிப்பதற்கு யோசனை கூட செய்யாதே என்று கூறுகிறார். மனிதராகிய நாம் மகிழ்ச்சியுடன் வாழ்ந்திட மன்னிப்பு மிக மிக அவசியம். ஆகவே மன்னிப்போம்! மறப்போம்!
- Bro. சங்கர் ராஜ்
ஜெபக்குறிப்பு:-
இந்த ஆண்டில் 1000 மிஷனெரிகள் எழும்ப ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864