By Village Missionary Movement
Tuesday, 30-Jun-2026இன்றைய தியானம்(Tamil) 30.06.2026
கருணையுடன் வாழ்ந்தால்
“எதைச் செய்தாலும், அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள்.” - கொலோ.3:24
பிச்சைக்காரன் ஒருவன் உணவகத்திற்கு வந்தான். அதை பார்த்த அந்த உணவகத்தின் மேலாளருக்கு கோபம் வந்தது. ஆனால் அங்கு பணி செய்த பெண் அவனிடம் சென்று ஐயா, உங்களுக்கு என்ன வேண்டும் என்று எல்லோரையும் உபசரிப்பது போல அந்த பிச்சைக்காரனையும் உபசரித்தாள். அவன் ஆர்டர் செய்த உணவை அவனுக்கு பரிமாறினாள். மேலாளருக்கு மிகவும் கோபம் வந்தது. அந்த பணிப் பெண்ணை அழைத்து அவனுக்கு உணவு பரிமாறுகிறாயே. அவன் எப்படி பில்லை கட்டுவான் என்றார். நம்முடைய உணவகத்திற்கு யார் வந்தாலும் ஏழை பணக்காரர் என்ற வேறுபாடு இல்லாமல் எல்லாரையும் சமமாக பார்க்க வேண்டும் அல்லவா. அவன் பிச்சைக்காரனாக இருக்கலாம் ஆனால் பிச்சைக்காரனுக்கு இங்கே அனுமதி இல்லை என்று எங்கேயும் பலகை வைக்கவில்லையே என்றாள்.
அவன் தன் பசியாற்ற வந்திருக்கிறான். அவனுக்கு உணவு வழங்கும் பொறுப்பு எனக்கு உள்ளது என்றாள். ஆனால் அவன் சாப்பிட்டதற்குரிய பில்லை அவன் கட்டவில்லை என்றால் நீ தான் அதை கட்ட வேண்டும். எனவே கவனமாக இரு என்று எச்சரித்தார். அவளும் மற்றொரு ஆர்டரை எடுக்க சென்று விட்டு பின்பு பில்லை கொண்டு வருவதற்குள் அவன் தப்பித்து போய்விட்டான். மேலாளர் அவளை அழைத்து நான் உன்னிடம் ஏற்கனவே சொன்னேன் அல்லவா? இப்பொழுது பில்லை கட்டாமல் போய்விட்டான். நீ தான் அதை கட்ட வேண்டும் என்றார். சரி ஐயா, அப்படியே செய்கிறேன். என் சம்பளத்தில் அதற்குரிய தொகையை கழித்து விடுங்கள் என்றாள். சரி சரி போய் சுத்தம் செய் என்றார். அவளும் அங்குள்ள தட்டுகளை எடுத்து சுத்தம் செய்த போது, அந்தப் பிச்சைக்காரன் சாப்பிட்ட தட்டின் கீழ் ஒரு சிறிய காகிதம் இருந்தது. அதில் என்ன எழுதி இருந்தது தெரியுமா? அம்மா, என்னை நீ நன்றாக வரவேற்றாய், மிகவும் அன்பாக உபசரித்து வயிறார உணவளித்தாய். நான் தான் இந்த உணவகத்தின் உரிமையாளர். மாறுவேடத்தில் இங்கு வந்தேன். உன் பொறுப்பை நீ நேர்த்தியாய் செய்தாய் அல்லவா எனவே உனக்கு மேலாளர் பதவியை அளிக்கிறேன் என்றார்.
இதேபோன்று நீங்கள் செய்யும் வேலை சிறியதோ அல்லது பெரியதோ எதுவாக இருந்தாலும், உங்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பில் உண்மையாக, ஏழை பணக்காரர் என்ற வித்தியாசம் இல்லாமல் செய்யுங்கள். வேதம் என்ன சொல்கிறது, “எதைச் செய்தாலும், அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள்” (கொலோ. 3:24). உரிமையாளர் அன்றைக்கு உணவகத்திற்கு வந்தது போல, ஆண்டவர் நம்மை ‘உண்மையும் உத்தமமுமான ஊழியன்’ என்று சொல்லும் நாள் ஒன்று வரும். ஆம், “உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்;” (நீதி.28:20). நாமும் அனுதினமும் உண்மையாய் வாழ நம்மை அர்ப்பணிப்போம், ஆசீர்வாதங்களைப் பெறுவோம்.
- N. ஐஸ்டின் பாலாஜி
ஜெபக்குறிப்பு
வில்லேஜ் டி.வி. ஊழியங்களுக்காக, அதன் தேவைகள் சந்திக்கப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864