By Village Missionary Movement
Monday, 28-Jun-2021இன்றைய தியானம்(Tamil) 28-06-2021
பாவத்தின் மேல் வெற்றி
“பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்திய ஜீவன்.” – ரோமர் 6:23
ஜான்பிராட்போர்ட் ஆண்டவருக்காக இரத்த சாட்சியாய் மரித்தவர். அவர் ஒரு நாளில் இரவில் நான்கு மணிநேரம் மட்டுமே தூங்குவாராம். அவரது ஆகாரம் மிகவும் குறைவானதே. மீதமுள்ள ஒவ்வொரு மணிநேரத்தையும் அவர் வேதவாசிப்பு, தியானம் மற்றவர்களுக்கு கர்த்தரை பற்றிக் கூறுதல், நன்மை செய்தல் போன்றவற்றில் செலவிட்டார். பாவத்தைக் குறித்து மக்களை மென்மையான விதத்திலும் அதே சமயத்தில் திட்டமாகவும் கடிந்து கொண்டு எச்சரித்தார். ஏனென்றால் தேவனோடு உள்ள தொடர்பு ஜனங்களுக்கு எப்போதும் இருக்க வேண்டும் என்று போராடினார். ஜான்பிராட்போர்டின் தனிப்பட்ட ஆவிக்குரிய வாழ்வு மிகவும் ஆழமான ஒன்றாகும். தனது அன்றாட பாவக் குற்றங்களையெல்லாம் அவர் ஒரு தாளில் எழுதி தனி ஜெபத்தில் தேவ சமூகத்தில் முழங்கால்படியிட்டு ஒவ்வொரு பாவத்தையும் ஆண்டவரிடம் அறிக்கையிட்டு அவைகளுக்காக தனது மார்பில் அடித்துக் கொண்டு மன்னிப்புக் கேட்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தார். அப்படி செய்ததன் மூலம் தனது இரட்சிப்பின் சந்தோஷத்தை ஆண்டவருக்குள் ஒவ்வொரு நாளும் புதுப்பித்துக் கொண்டார்.
இவர் தன்னுடைய வாழ்க்கையில் அறிந்து கொண்ட முக்கியமான காரியம் பாவத்தின் சம்பளம் மரணம். அது மிகவும் கொடியது. பாவம் தேவனுக்கும் மனிதனுக்கும் இடையே உள்ள உறவை துண்டிக்க செய்கிறது. தேவனற்ற வாழ்வு வாழ்வது என்னத்திற்கு என்பதே அவர் எண்ணம்! அப்போஸ்தலனாகிய பவுல் பாவத்தைக் குறித்தும் அதன் வீரியத்தைக் குறித்தும் அநேக காரியங்களைச் சொல்கிறார். விரும்புகிறதை செய்யாமல் வெறுக்கிறதையே செய்கிறேன். நான் அல்ல, எனக்குள் வாசமாயிருக்கிற பாவமே அப்படிச் செய்கிறது என்று பாவத்தை குறித்தும் அதனுடைய கிரியைகளைக் குறித்தும் கூறுகிறார்.
பிரியமானவர்களே! நாமும் பாவத்தோடு அனுதினமும் போராடிக் கொண்டுதான் இருக்கிறோம். அதில் அடிமையாகி விடாதபடிக்கு அதிலிருந்து தப்பித்துக்கொள்ள வேண்டுமென்றால், ஜான்பிராட்போர்டை போல நம் வேதவாசிப்பு, தியானம் மற்றவர்களுக்கு இயேசுவைப் பற்றிக் கூறுதல் நன்மை செய்தல் போன்ற காரியங்களை செய்வோம். கர்த்தர் நிச்சயமாக நம்மை ஆசீர்வதிப்பார். ஆமென்!
- P. ஸ்டீவ் மேத்யூ
ஜெபக்குறிப்பு:
நாம் வழிநடத்தும் வாலிபர்கள், சிறுவர்கள் இந்த நாட்களில் பின்வாங்காமல் கர்த்தருக்குள் நிலைத்திருக்க ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250