By Village Missionary Movement
Sunday, 26-Sep-2021இன்றைய தியானம்(Tamil) 26-09-2021 (Kids Special)
கீழ்ப்படியா ஜிங்கி
“பிள்ளைகளே, உங்கள் பெற்றோருக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படியுங்கள்;…” - கொலோசெயர் 3:20
பிங்கி ஜிங்கி என்ற இரண்டு குட்டி குரங்குகள் தன் அம்மாவுடன் ஒரு ஆலமரத்தில் வசித்த வந்தன. அந்த ஆலமரத்திற்கு அருகில் ஒரு குளம் ஒன்று இருந்தது. அந்த குளத்தில் முதலையும் தன் குட்டிகளுடன் வசித்து வந்தது. அவ்வப்போது இந்த பிங்கியும், ஜிங்கியும் தன் அம்மாவுடன் சேர்ந்து அந்த ஆலமரத்து விழுதுகளை பிடித்துக் கொண்டு அங்கும் இங்கும் ஊஞ்சல் ஆடிக்கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வந்தன. இவைகள் ஒவ்வொரு நாள் விளையாடுவதையும் பார்த்துக் கொண்டிருந்த முதலைக்கு இந்த குட்டி குரங்குகளை எப்படியாவது ஏமாற்றி கீழே வரவைத்து சாப்பிட வேண்டுமென ஆசை வந்தது.
ஒரு நாள் தாய் குரங்கு இந்த குட்டி குரங்குகளிடம், “நான் இரைதேட வெளியே செல்கிறேன். நீங்கள் இருவரும் பத்திரமாக இருக்க வேண்டும். மரத்தைவிட்டு கீழே இறங்கவே கூடாது சரியா” என்றது. உடனே குட்டி குரங்குகளும், “சரி அம்மா” என்று சொன்னது. உடனே அம்மா குரங்கும் போய்விட்டது. இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த முதலைக்கு உள்ளத்தில் ஒரே சந்தோஷம், இதுதான் இந்த குட்டி குரங்குகளைச் சாப்பிட சரியான நேரம் என்று எண்ணி குளத்திற்குள் இருந்து வெளியே வந்து மரத்தை ஏறிட்டுப் பார்த்து, மெதுவான குரலில், “ஏய் பிங்கி, ஜிங்கி எப்படியிருக்கிறீங்க, ஆமா உங்களுக்கு இந்த மரத்திலேயே தொங்கிக்கிட்டு இருப்பது போர் அடிக்கலையா, என்னை பாருங்கள், நான் எவ்வளவு ஜாலியா தண்ணீரில் நீச்சலடித்து குளிக்கிறேன். உங்களுக்கு அப்படி ஆசையில்லையா?” என்றது. உடனே ஜிங்கி, “எனக்கும் தண்ணீரில் நீச்சலடித்து குளிக்க ஆசையாகத்தான் இருக்கிறது” என்றது. உடனே முதலை, “நாம எல்லோரும் நண்பர்களாக இருப்போம், வா ஜிங்கி நான் உன்னை கூட்டிக்கொண்டு செல்கிறேன்” என்றது. ஜிங்கியும் தண்ணீரில் குளிக்கப் போகிற ஆசையில் மடமடவென்று மரத்தை விட்டு இறங்கியது.
பிங்கியோ, “ஏய் ஜிங்கி கீழே இறங்காதே, அந்த முதலை உன்னை கொன்று போட்டுவிடும்” என்றது. ஆனால் ஜிங்கியோ, கேட்காமல் கீழே இறங்கி முதலையின் முதுகில் போய் உட்கார்ந்தது. பிங்கியிடம் , “நீ இந்த மரத்திலேயே தொங்கிக்கிட்டு இரு. நான் போய் தண்ணீரில் நீச்சலடித்து குளிக்கப் போகிறேன்” என்று சொன்னது. ஜிங்கியும் முதலையும் பிங்கிக்கு “Bye Bye” சொல்லிவிட்டு கிளம்பினார்கள். முதலை பாதி தண்ணீருக்குள் போன பிறகு குரங்கிடம், “நான் உன்னை குளிப்பதற்கு அல்ல கொன்று சாப்பிடத்தான் கூட்டிக்கொண்டு வந்தேன்” என்றது. ஜிங்கியோ, “ நண்பா வேண்டாம் என்னை விட்டு விடு “ என்று கெஞ்சியது. அதற்குள் முதலை அந்த குரங்கை அடித்து சாப்பிட்டு விட்டது. இதையெல்லாம் மரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த பிங்கி, இப்படி கீழ்ப்படியாமல் தன் உயிரை மாய்த்து விட்டதே என்று எண்ணி கதறி அழுதது.
குட்டி தம்பி, தங்கச்சி! இந்த முதலையைப் போலத்தான், பிசாசும் உன் நண்பன் மூலம் உன்னிடம் நயவஞ்சகமாக பேசி, ஏமாற்றி உன்னை இயேசப்பாவிடமிருந்து பிரிக்க பார்ப்பான். நீ தான் கவனமாக இருக்க வேண்டும். உனது பெற்றோர்கள் சொல்வதைக் கேட்டு அப்படியே கீழ்ப்படிய வேண்டும். ஓகே. வா.
- Mrs. சாராள் சுபாஷ்
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250