By Village Missionary Movement
Monday, 22-Nov-2021இன்றைய தியானம்(Tamil) 22-11-2021
இருதயத்தில் முதலிடம்
“முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்.” - மத்தேயு 6:33
ஓர் தனிமனிதன் தேவனுக்கு தன் வாழ்வில் முதலிடம் கொடுக்கும்போது ஆயிரமாயிரம் நன்மைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்பதற்கு
Rev. G.S. Mohan என்ற தேவ மனிதர் ஒரு உதாரணம். இவர் தன் வாலிப நாட்களில் இஷ்டம் போல் வாழ்ந்து வந்தவர். இயேசுவை தன் சொந்த இரட்சகராய் ஏற்றுக்கொண்ட பின் ஒவ்வொரு நாளும் ஆண்டவரை தேட ஆரம்பித்தார். இயேசு இல்லாமல் நான் ஒன்றும் செய்ய முடியாது என்று தீர்மானித்து ஆண்டவரின் அழைப்பை ஏற்றுக் கொண்டவராய், ஆண்டவரின் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து வேலையை ராஜினாமா செய்து விட்டு முழுநேர மிஷனெரி பணிக்கு ஒப்புக்கொடுத்தார். இப்படி அவர் தன் வாழ்வில் தேவனுக்கு முதலிடம் கொடுத்தபடியால் பெற்றுக் கொண்ட நன்மைகள் ஏராளம் ஏராளம். தமிழ் மெதடிஸ்ட் திருச்சபையில் போதகராக பணியாற்றும் கிருபை பெற்றார். சேலம் டேனிஷ்பேட்டையிலுள்ள பெத்தேலில் பல பொறுப்புகளில் தலைமை பதவியில் இருந்து தேவ பணி செய்தார். பின் ஒரு மிஷனெரி ஸ்தாபனத்தில் அதிக ஈடுபாடு கொண்டு அநேக பேரை ஆண்டவருக்குள் வழிநடத்தினார். இன்னும் குடும்பத்தில் ஆசீர்வாதம் பெற்றார். பிள்ளைகளின் வாழ்வில் உயர்வுகளை கண்டார். தேவன் அவரை அதிகமாய் உயர்த்தினார்.
வேதத்தில் கூட யூதாவின் ராஜாவாகிய அபியா ராஜா ஆட்சியில் இருந்தபோது யுத்தம் செய்ய நேரிட்டது. முதலில் அவர் செய்த காரியம் ஆண்டவரைத் தேடினார். தேவன் எங்களோடு இருக்கிறார் என்று தைரியமாய் சொல்லுகிறதைப் பார்க்கிறோம். ஜனங்களும் ராஜாவும் தேவனை சார்ந்து கொண்டபடியால் யுத்தத்தை தைரியத்தோடு மேற்கொண்டார்கள் என பார்க்கிறோம். அபியா ராஜாவின் காலத்தில்தான், யெரொபெயாம் பலங்கொள்ள மாட்டாதே போய், கர்த்தர் அவனை அடித்ததினால் மரணமடைந்தான்.
அன்பான தேவனுடைய பிள்ளைகளே, இயேசுவை ஏற்றுக் கொண்டால் மட்டும் போதும் என்று இல்லாமல் இயேசுவுக்கு முதலிடம் கொடுக்கும்போது ராஜாவுக்கு கிடைத்த வெற்றியும், மேற்கண்ட தேவமனிதருக்கு கிடைத்த நன்மைகளும் நிச்சயமாக நம் வாழ்விலும் கிடைக்கும் என்பதற்கு சந்தேகம் இல்லை. தேவன்தாமே இவ்விதமாக வாழ அருள்புரிவாராக. ஆமென்.
- Mrs. ஜோன்ஸ்மேரி ராபர்ட்
ஜெபக்குறிப்பு:
பணித்தளங்களுக்கு ஊழியத்திற்கு செல்லும் வாகனங்களுக்கு தேவ பாதுகாப்பு உண்டாக, விபத்தின்றி தேவன் பாதுகாக்க ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250