By Village Missionary Movement
Tuesday, 23-Nov-2021இன்றைய தியானம்(Tamil) 23-11-2021
திடீர் தாக்குதல்
“...பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார்,…” – 1பேதுரு 5:5
டி.எல். மூடி என்ற தேவ ஊழியர் ஒரு முறை இங்கிலாந்து தேசத்திலுள்ள ஒரு மாநகரில் மிகப் பெரிய கன்வென்ஷன் கூட்டத்தில் பேசிவிட்டு மேடையை விட்டு கீழே இறங்கினார். படிக்கட்டைத் தாண்டியதும், ஒரு நபர் விரைந்து வந்து மூடியின் கையை குலுக்கி, “இன்று மிக பிரமாதமாக பேசினீர்கள்” என்று பாராட்டினார். உடனே மூடி, “இன்று என்னை பாராட்டும் இரண்டாவது நபர் நீங்கள்” என்றார். அந்த நபர் குழம்பிப்போய் தனக்கு முன் எவரையும் காணாததினால், “எனக்கு முன்னால் உங்களை பாராட்டியது யார்?” என்று கேட்டார். மூடி கூறினார், “நான் செய்தியை முடித்துவிட்டு கீழே இறங்கும் முன்பாக சாத்தான் என் காதில் வந்து, மூடியாரே இன்று உம் பிரசங்கம் அபாரம் என்று பாராட்டினான்” என்றார்.
பரிசுத்த வேதாகமத்தில் அப்போஸ்தலனாகிய பேதுரு இப்படியாக எழுதுகிறார். பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார். நாம் இந்த பூமியில் வாழ்கின்ற நாட்களில் நமக்கு உண்டானவை எல்லாம் தேவனுடைய கிருபையினால் நமக்கு கிடைத்தது. எனவே நாம் இந்த பூமியில் வாழ்கின்ற நாட்களில் “இது என்னால் உண்டான ஆசீர்வாதம், என் கைபெலனும், என் சாமர்த்தியமும் இதை சம்பாதித்தது” என்று சொல்லாதபடிக்கு எச்சரிக்கையாயிருப்போம். நம் வாழ்க்கையில் பெருமைக்கு இடங்கொடாதிருப்போம்.
இதை வாசிக்கின்ற நண்பர்களே! கிறிஸ்தவ வாழ்க்கையில் சோதனைகள் அதிகம். ஒவ்வொரு சோதனையும் ஒரு யுத்தத்திற்கு சமமானதாகும். யுத்தத்தில் வெற்றி பெற்றால், யுத்தத்திற்கு முன்பாக எவ்வளவு கவனமாய் இருந்தோமோ அதைவிட இருமடங்கு அதிக கவனமாயிருக்க வேண்டும். வெற்றி களிப்பின்போது வரும் இந்த பெருமையான எண்ணம் நம்மை கீழே விழ வைக்கும் ஒரு மறைவான கண்ணி என்றும் கூறலாம். ஆம், சாத்தான் நம்மை வீழ்த்த பொறாமை, பெருமை போன்ற வெளியில் தெரியாத பாவத்தில் விழத்தள்ள சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டே இருக்கிறான் என்பதை மறந்து போகக் கூடாது. ஆகவே எப்போதும் நாம் விழிப்பாயிருப்போம், அவனது மறைவான கண்ணிக்கு தப்புவோம்.
- T. சங்கர்ராஜ்
ஜெபக்குறிப்பு:
அலுவலகப் பணிகள் மற்றும் பணியாளர்களை தேவன் நேர்த்தியாய் வழிநடத்த ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250