By Village Missionary Movement
Thursday, 20-Jan-2022இன்றைய தியானம்(Tamil) 21-01-2022
சேமிக்கப்பட்ட கண்ணீர்
“...என் கண்ணீரை உம்முடைய துருத்தியில் வையும்; அவைகள் உம்முடைய கணக்கில் அல்லவோ இருக்கிறது?” – சங்கீதம் 56:8
ஒரு குடும்பத்தில் ஒரு தாயார் அநேக விதமான கஷ்டங்களை அனுபவித்து வந்தார்கள். கணவரிடம் அடிவாங்கிக் கொண்டு கிடைத்த வேலைக்குச் சென்று தன் இரண்டு மகன்களுக்காக பொறுமையாக அனைத்தையும் சகித்துக்கொண்டு நாள்தோறும் கண்ணீரோடு ஜெபித்துக்கொண்டே இருப்பார்கள். இவர்களது ஜெபம் மிக நீண்ட நாள் சென்றது. அந்த தாயாரும் சோர்ந்து போகாமல் ஜெபித்துக்கொண்டே இருந்தார்கள். சில வருடங்களுக்குப் பிறகு தாயாரின் ஜெபம் கேட்கப்பட்டது. அவர்கள் வடித்த கண்ணீரை ஆண்டவர் பார்த்தார். இரண்டு மகன்களின் எதிர்காலமும் மிக மிகச் சிறப்பாக அமைந்தது. கணவரும் மனம் மாறினார். குடும்பமாக மகிழ்ச்சியாக இருந்தனர். காரணம், தேவன் அவர்களின் கண்ணீரின் ஜெபத்தை கணக்கில் (சேமிப்பில்) வைத்திருந்தார். சரியான நேரத்தில் பதில் கொடுத்தார்.
வேதத்திலும் தாவீது கோலியாத்தைக் கொன்றதும் மக்கள் சவுல் கொன்றது ஆயிரம் தாவீது கொன்றது பதினாயிரம் என புகழ்ந்ததும் தாங்க முடியாமல் தாவீதை கொல்ல வகை தேடினான். கோலியாத்தைக் கொன்றதாக தன் மகளை ஜனங்களை பிரியப்படுத்த திருமணம் செய்து வைத்தாலும், காடு, மலை, பாலைவனம் என தன்னைக் காப்பாற்றிக்கொள்ள தாவீது ஓடி அலைந்தார். அப்போது அநேக நேரங்கள் கண்ணீர் விட்டு ஜெபித்தார் தாவீது. ஆகவே, ”என் அலைச்சல்களைத் தேவரீர் எண்ணியிருக்கிறீர்; என் கண்ணீரை உம்முடைய துருத்தியில் வையும்; அவைகள் உம்முடைய கணக்கில் அல்லவோ இருக்கிறது?” என தாவீது சொல்கிறார். அதுபோல கண்ணீரும் கணக்கில் வைக்கப்பட்டு இருந்ததால் தாவீது ஏற்ற சமயம் வந்தபோது இஸ்ரவேல் மற்றும் யூத ஜனத்தின் ராஜாவாக தாவீது உயர்த்தப்பட்டார். கர்த்தரின் கண்களுக்கு எதுவும் மறைவாக இல்லை.
இதை வாசிக்கும் அன்பரே! நீங்களும் நீண்ட நாட்களாக ஏதாவது ஒரு காரியத்திற்காக கண்ணீரோடு ஜெபிக்கிறேன், நான் கண்ணீர் வடித்துக் கொண்டேயிருக்கிறேன், பலன் இல்லையே என புலம்புகிறீர்களோ? உங்கள் கண்ணீர் வீணாகவில்லை. பரலோகத்தில் உங்கள் கணக்கில் வரவாக வைக்கப்பட்டுள்ளது. அதற்குப் பலன் நிச்சயம் உண்டு. தேவன் எதையும் கடனாக வைப்பதில்லை. ஏற்ற சமயமும் வேளையும் வரும்போது பலன் வரும். சோர்ந்து போகாமல் தொடர்ந்து ஜெபம் செய்யுங்கள். ஜெயம் நிச்சயம்.
- S. காலேப் ராஜா
ஜெபக்குறிப்பு:
புதிய ஆண்டில் நம்முடன் இணைந்து ஊழியம் செய்யும் தோழமை மிஷனெரிகளை பணித்தளங்களில் தேவன் வல்லமையாய் பயன்படுத்த ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250