By Village Missionary Movement
Friday, 11-Mar-2022இன்றைய தியானம்(Tamil) 11-03-2022
குணசாலியான ஸ்திரீ
“...நீயோ அவர்கள் எல்லாருக்கும் மேற்பட்டவள் என்று அவளைப் புகழுகிறாள்.” - நீதிமொழிகள் 31:29
என் அன்பிற்குரிய தாயார் கடந்த ஜனவரி மாதம் 15 ஆம் தேதி கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்கள். அவர்களை பற்றி ஒரு சில காரியங்களை தேவநாம மகிமைக்காக பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.
என் தாயார் கிறிஸ்துவை அறியாத குடும்பத்தில் பிறந்தவர்கள். ஆனாலும் வேதம் கூறும் குணசாலியான ஸ்திரீகளுக்குரிய நற்பண்புகள் அநேகம் அவர்கள் இயல்பிலேயே இருந்தது. பொறுமை, தாழ்மை, அன்பு, கீழ்ப்படிதல் போன்றவற்றில் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கினார். எங்கள் பெற்றொர் எங்கள் முன் ஒருநாளும் சண்டையிட்டதில்லை, எங்களையும் அன்போடு வளர்த்தனர். நான் என் கல்லூரி நாட்களில் ஆண்டவரை ஏற்றுக்கொண்டு, என் தாயாருக்கும் இயேசுவை அறிமுகம் செய்தேன். ஆனாலும் கணவருடைய வார்த்தையை மீற முடியாமல் அவர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளவில்லை.
ஒருநாள் என் அக்காவின் பிள்ளைப்பேறு காலத்தில் என் தாயார் சந்தர்ப்ப சூழ்நிலையில் தனியாக வட இந்தியா (ஜோத்பூர்) செல்ல நேர்ந்தது. இப்போது போல தொலைதொடர்பு வசதி இல்லாத அந்நாட்களில், என் தாயாரின் சிறிய ஜெபம், அவரை பத்திரமாக என் அக்கா வீட்டில் சேர்த்தது. ஆண்டவரே என் மகளுடைய பிள்ளைப்பேறு காலத்திற்கு உரிய நேரத்தில், உரிய இடத்தில் என்னை சேர்த்துவிடும். தமிழை தவிர வேறுமொழி அறியாத என் தாயாரின், இந்த ஜெபத்திற்கு ஆண்டவர் அளித்த பதில், அவர்கள் ஆண்டவரை ஏற்றுக்கொள்ள வைத்தது. பின்பு 1982 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், எங்கள் சொந்த ஊரில் ஞானஸ்நானமும் பெற்றார். அதன்பின்பு ஆண்டவர் என் தாயாரை பல மரண கண்ணிகளுக்குத் தப்புவித்து (ulcer, Lepto Spyros’s, Heart block, Blood vomit, short circuit, corona) அழகாய் வழிநடத்தி, 94 ஆண்டுகள் ஜீவனைத் தந்தார். தன் பெற்றோரையும், கணவரையும், மருமகளையும் அவரவர் மரணப் படுக்கைகளில் இன்முகத்தோடு உபசரித்தார். ஒருபோதும் மற்றவர்களைக் குறித்துத் தவறாகப் பேசவோ குறைசொல்லவோ மாட்டார். ஆலயத்திற்கு செல்வதில் மிகவும் வாஞ்சையோடு இருப்பார். தன் மரணப்படுக்கையிலும் ஒருபோதும் முறுமுறுப்புடன் காணப்பட்டதில்லை.
ஆம், என் தாயாரின் வாழ்வில் ஒருநாளும் அவர்கள் எங்களுக்கு இப்படித்தான் இருக்கவேண்டும் என்று அறிவுரைகளை கூறியது இல்லை. மாறாக குணசாலியான ஸ்திரீயாக வாழ்ந்து காட்டினார்கள். நாமும் அதிகாலையில் தேவனைத் தேடுவது, ஏழைகளுக்கு உதவுவது, தன் வீட்டுக்காரியங்களை ஒழுங்குபடுத்துவது, கணவருக்கு கிரீடமாக இருப்பது என அனைத்தும் நம்மிடம் காணப்பட ஜெபத்தோடுகூட நாம் முயற்சி செய்வோம். அப்பொழுது நாமும் கூட உயிருள்ள வரை குணசாலியான ஸ்திரீயாக கணவர் பிள்ளைகளால் பாக்கியவதி எனப் புகழப்படுகிறவர்களாக, வாழ ஆண்டவர் கிருபை செய்வாராக.
- Mrs. புவனா தனபாலன்
ஜெபக்குறிப்பு:
வேதாகமக் கல்லூரியில் கர்த்தருக்குச் சித்தமான நபர்கள் இணைந்து பயிற்சி பெற ஜெபியுங்கள்.
Whatsapp:
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள +9194440 11864 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250