By Village Missionary Movement
Sunday, 01-May-2022இன்றைய தியானம்(Tamil) 02-05-2022
கண்மணியே கேள்
“நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனதாழ்மையையும் சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு...” - கொலோ. 3: 12
‘Beauty’ தன் பெயருக்கேற்றபடி அழகிய இளம் பெண் தன் அழகுக்கு அழகு சேர்ப்பதில் இன்பம் காண்பவள். கல்லூரியின் கலை விழாவில் பங்கேற்பதற்காக அதிகாலையில் இருந்தே தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தாள். பார்ப்பவர்களின் கண்களை ஈர்க்கவும், தன்னை வசீகரமாய் காட்டவும், சில மணி நேரங்களிலே அழிந்துவிடும் அலங்கார பொருட்களினாலே தன் முகத்தை அழகுபடுத்திக் கொண்டிருந்தாள். தன் காந்த கண்களுக்கு காஜல் போட்டும், சிவந்திருந்த தன் இதழ்களை மேலும் வண்ணத்தினால் மெருகேற்றிக் கொண்டிருந்தவளின் காதுகளில் ஒலித்தது ஒரு குரல்! பிறந்த சில மாதங்களிலேயே பெற்றோரை பறிகொடுக்க நேர்ந்து திக்கற்றவளாய் இருந்தவளை தூக்கியெடுத்து வளர்த்த தாயின் குரல் அது. வியாதிப்படுக்கையில் உதவிக்காக தன்னை அழைத்த குரலை அலட்சியப்படுத்தி, சற்றும் மனமிரங்காமல் சிட்டாகப் பறந்து கலை விழாவுக்குச் சென்று அழகிப் போட்டியில் பங்கேற்று பரிசும் பெற்றாள். பரிசோடு வீட்டுக்கு வந்தவளை வரவேற்றது அழுகையின் சத்தம்! வேகமாக வீட்டினுள்ளே சென்றவள் கண்களில் கண்ட காட்சி, பெற்ற தாயினும் மேலாக தன்னை சீராட்டிப் பாராட்டி வளர்த்த தாயின் சடலம். தன் ஒரே ஆதரவான தாயையும் இழக்கக் கொடுத்த மனம், தவியாய் தவித்தது. உதவிக்காக கூப்பிட்டபோது ஓடோடிச் செல்லாததை எண்ணி வேதனைப்பட்டாள். பிரயோஜனமென்ன? காலம்தான் கடந்து சென்றுவிட்டதே மரித்தவர் உயிர்பெற்று வரவா போகிறார்?
அன்பு பிள்ளைகளே! அழகு என்று எதை எண்ணுகிறோம்? நல்ல Color-ஆக இருக்கிறதும், Fashion-ஆக Trend-க்கு ஏற்ப உடுத்துகிறதும், Make-up போட்டு Attractive-ஆக தெரிவது மட்டுமா அழகு? வெளித்தோற்றத்தில் அழகாக தன்னை காண்பித்துவிட்டு தேவன் பார்க்கும் “உள்ளான இருதயத்தின் அழகு” காணப்படாமல் அழுக்காய் இருதயம் காணப்படுவதினால் பிரயோஜனமென்ன?
இன்று ஏழைகளின் கூக்குரலுக்கு தன் செவிகளை அடைத்தும், நம்மிடத்தில் உதவியை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு முகத்தை திருப்பியும், வயதானவர்களை ஒரு பொருட்டாக எண்ணாமல் இருப்பதும், பெரியோர்களை அலட்சியப்படுத்தியும் பெரியவர்களின் புத்திமதியை எற்றுக்கொள்ளாமல் இருப்பதும் மலிந்து காணப்படுகிறது. உலகத்தின் பிள்ளைகளுக்கும், கிறிஸ்துவின் பிள்ளைகளுக்கும் வித்தியாசம் உண்டு. கிறிஸ்துவினுடையவர்கள் கிறிஸ்துவின் சாயலை வெளிபடுத்துகிறவர்களாக காணப்பட வேண்டும். சாந்தமும், மனத்தாழ்மையும், அன்பும், கரிசனையும் உள்ளவர்களாகவும், எப்போதும் தனக்கானவைகளையல்ல, கிறிஸ்துவை அறிவியாமல் அழிந்து போகும் தன் நண்பர்களை குறித்து பாரம் கொண்டவர்களாகவும் காணப்பட வேண்டும். இப்படிப்பட்ட உள்ளான அழகை வெளிபடுத்துவதினால் நம் மூலமாக தேவனும் மகிமைப்படுவார். உலகம் வாழ்கிறபடி வாழ்வதல்ல கிறிஸ்தவ வாழ்க்கை, உலகத்திற்காக நாம் வாழாமல் கிறிஸ்துவுக்காக வாழ்வதே நம் இலட்சியமாக இருக்க வேண்டும்.
- Mrs.வசந்தி ராஜமோகன்
ஜெபக்குறிப்பு:
இம்மாதம் முழுவதும் நடைபெறவுள்ள ஊழியங்களில் தேவ கரம் உடனிருக்க; தேவன் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ண ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250