By Village Missionary Movement
Thursday, 02-Jun-2022இன்றைய தியானம்(Tamil) 03-06-2022
காணப்படாதவைகளே நித்தியம்
“...காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள்.”- 2 கொரி. 4: 18
பவுல் அடிகளார், கொரிந்து சபைக்கு மேற்கண்ட வசனத்தை விளக்கும்போது, காணப்படுகின்றவைகளையல்ல, காணப்படாதவைகளை நோக்கி பொறுமையோடே ஓடக்கடவோம் என்கிறார். இந்த சத்தியத்தை விளங்கிக் கொள்ள ஜான் பனியனின் “மோட்சப் பிரயாணம்” புத்தகத்திற்குப் பிரயாணம் பண்ணி, பொருள் கூறுபவர் வீட்டிற்குச் செல்லுவோமா?
கதையின் Hero-வான கிறிஸ்தியானின் கையைப் பிடித்து இழுத்தபடி, ஒரு சிறு அறையினுள் நுழைந்தார் பொருள் கூறுபவர். அங்கே இரண்டு சிறுவர்கள் எதிரெதிராக அமர்ந்திருந்தார்கள். கோபமுகத்தோடு குதித்துக் கொண்டிருந்தான் ஆத்திரக்காரன் (Passion); சாந்தமான முகத்தோடு அமைதியாக இருந்தவன் பொறுமை (Patience). “ஆத்திரக்காரன் ஏன் இப்படிக் கோபமாக இருக்கிறான்?” என்று கேட்டான் கிறிஸ்தியான். “அவன் கேட்ட ஒரு பொருளுக்காக இன்னும் ஒரு வருடம் காத்திருக்கும்படி அவன் பெற்றோர் கூறிவிட்டார்கள். அவனோ இப்போதே அதைக்கேட்டான். அதனால்தான் இப்படி ஆத்திரப்படுகிறான். ஆனால் பொறுமையோ அமைதியாகக் காத்திருக்கிறான்" என்று விளக்கினார் பொருள் கூறுபவர்.
அப்போது ஒருவர் பை நிறைய பொன்னும் மணிகளும் கொண்டுவந்து, ஆத்திரக்காரனின் காலடியில் கொட்டினார். பொறுமையைப் பார்த்து கிண்டலாக சிரித்தபடி, ஆத்திரக்காரன், அந்தப் பொக்கிஷத்தைக் கைகளில் அள்ளிக்கொண்டான். ஆனால் சிறிது நேரத்திற்குள் அவையனைத்தையும் செலவழித்துவிட்டான்! அவன் உடுக்கக் கூட கந்தை ஆடைகளே மிஞ்சின! “ஆத்திரக்காரன் இந்த உலகத்து மக்களுக்கு அடையாளம். பொறுமைதான் வரப்போகும் புதிய உலகத்து மக்களுக்கு அடையாளம். ஆத்திரக்காரன் எப்படி எல்லாமே உடனே வேண்டுமென்று ஆத்திரப்பட்டானோ, அவ்வாறே இவ்வுலக மக்களும் எல்லாவற்றையும் இப்போதே அனுபவிக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறார்கள். நமது மரணத்திற்குப் பின்னாலுள்ள வாழ்க்கையைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதேயில்லை! ஆத்திரக்காரனின் பொக்கிஷம் விரைவாக அழிந்து போனதுபோல, இவ்வுலக்கத்து இன்பங்களும் சீக்கிரமே அழிந்துபோகும். நாம் நித்திய வாழ்வையே விரும்பவேண்டும் என்பதற்கு இது ஒரு படிப்பினை” என்றார் பொருள் கூறுபவர்.
ஆம்! இவ்வுலகில் காணப்படும் அழகெல்லாம் ஒருநாள் அழிந்துவிடும்; மறுமையின் மகிமையோ ஒருக்காலும் மாறாது. லாசரு – ஐசுவரியவான் உவமையில், ஆபிரகாம் கூறுவதைக் கேளுங்கள்: “நீ பூமியில் உயிரோடிருக்குங் காலத்தில் உன் நன்மைகளை அனுபவித்தாய் லாசருவும் அப்படியே தீமைகளை அனுபவித்தான், அதை நினைத்துக்கொள்; இப்பொழுது அவன் தேற்றப்படுகிறான், நீயோ வேதனைப்படுகிறாய்” நாம் இவ்வுலகத்திற்குரியவர்களா, நித்தியத்திற்குரியவர்களா?
- Mrs.பியூலா செல்வராஜ்
ஜெபக்குறிப்பு:
மிஷனெரிகளின் குடும்பம், பிள்ளைகளின் சரீர சுகம் மற்றும் படிப்பிற்காக, வரும் கல்வியண்டிற்கான படிப்பிற்கான தேவைகள் சந்திக்கப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250