By Village Missionary Movement
Monday, 13-Jun-2022இன்றைய தியானம்(Tamil) 11-06-2022
விசுவாச ஜெபம்
“விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.” – எபிரெயர் 11:1
கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு முன்பு எல்லோரைப் போலவும், மிகுந்த ஆசையோடு 10-ஆம் வகுப்பிற்குள் நுழைந்தேன். எங்கள் குடும்பம் பொருளாதாரத்தில் சற்று பின் தங்கிய குடும்பம். ஒருநாள் நான் என் அப்பாவிடம் சென்று, “நம் பொருளாதாரத்தை உயர்த்த வழி ஏதேனும் இருக்கின்றதா? நான் அதற்கு என்ன செய்ய வேண்டும்” எனக் கேட்டேன். என் அப்பா உடனே, “நீ 10-ஆம் வகுப்பில் நன்றாகப் படித்து, 420 மார்க் எடுத்தால் நல்ல பாலிடெக்னிக் கல்லூரியில் இடம் கிடைக்கும். பின்பு நல்ல வேலைக்குச் சேர்ந்து, நம் நிலைமையை மாற்றலாம்” எனக் கூறினார். நன்றாகப் படிக்க ஆரம்பித்தேன். எங்கள் வீட்டில் மின் வசதி இல்லாததால், தெரு விளக்கின் வெளிச்சத்தில்தான் படிக்க வேண்டும். ஒரு வழியாக தேர்வு முடிந்தது. நான் எழுதியிருந்ததை வைத்துக் கணித்த போது 380 மார்க் வரும்போல் இருந்தது. இதை என் அப்பாவிடம் கூறினேன். அவர், நீ Xerox கடைக்கு அல்லது துணிக்கடைக்குத் தான் வேலைக்குச் செல்ல வேண்டும் எனக் கூறிவிட்டார்.
என் வீட்டிற்கு அருகில் உள்ள புறமத மூதாட்டி ஒருவர் எதற்கெடுத்தாலும் “இயேசப்பா” எனக் கூறியத்தை கவனித்தேன். என்னடா இது? நின்றாலும் இயேசப்பா, படுத்தாலும் இயேசப்பா எனக் கூறுகிறாரே என நினைத்தவாறு, அவரிடம் சென்று “எதற்கு இப்படிச் சொல்லுகிறீர்கள்” எனக் கேட்டேன். அதற்கு அவர் “நான் உடல் நிலை சரியில்லாமல் மரிக்கும் நிலையில் இருந்தேன். மருத்துவர்கள் என்னை கைவிட்ட சூழ்நிலையில் ஒரு பெண் எனக்காக இயேசப்பாவிடம் ஜெபித்தாள். அவர் எனக்குப் பரிபூரண சுகமளித்தார்” எனக் கூறினார். நான் ஆச்சரியத்தோடே, “நான் கேட்டாலும் இயேசப்பா செய்வாரா?” எனக் கேட்டேன். உடனே அந்த மூதாட்டி, ஆம் எனச் சொல்லி, அவருக்கு ஜெபிக்கத் தெரியாததால் அந்த சகோதரியிடம் அழைத்துச் சென்றார். அந்த சகோதரி எனக்காக ஜெபித்தார். நானும் இயேசப்பா செய்வார் என்று நம்பினேன். என்ன ஆச்சரியம்! என் தந்தை கூறியது போலவே நான் ஜெபித்தது போலவே, 420 மார்க் எடுத்திருந்தேன். நல்ல பாலிடெக்னிக் கல்லூரியில் இடமும் கிடைத்தது. காற்றாலை என்னும் கரண்ட் தயாரிக்கும் கம்பெனியில் வேலையும் கொடுத்தார். ஆண்டவரை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ள கிருபை செய்தார். இன்று வாரந்தோறும் விடுமுறை நாட்களில் ஊழியம் செய்யவும் தயவு பாராட்டியுள்ளார்.
அன்பு வாலிபப் பிள்ளைகளே! நாம் விசுவாசத்தோடு கூட இயேசுவிடம் எதைக் கேட்டாலும் யார் கேட்டாலும் அவர் நிச்சயம் செய்வார். எபிரெயர் 11:1 கூறுகிறது, “விசுவாசம் என்பது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது” நீங்களும் கூட அநேகர் பொதுத் தேர்வை எழுதியிருப்பீர்கள். விசுவாசத்தோடு கூட இயேசுவிடம் கேளுங்கள். உங்களுக்கும் நிச்சயம் நல்ல மதிப்பெண்கள் மற்றும் கல்லூரியைத் தருவார். அதுமட்டுமல்லாமல், வாழ்வில் எந்த சூழ்நிலையிலும் இயேசுவை மாத்திரம் பிடித்துக் கொள்ளுங்கள். என் வாழ்வை ஆசீர்வதித்து உயர்த்தின தேவன் உங்களையும் ஆசீர்வதிப்பார்.
- Bro.மாரியப்பன்.
ஜெபக்குறிப்பு:
மோட்சப் பயணம் இதழை எழுதுபவர்களையும் எடிட் பண்ணுபவர்களையும் தேவன் விசேஷித்த ஞானத்தினால் நிரப்ப ஜெபியுங்கள்
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250