By Village Missionary Movement
Monday, 29-Aug-2022இன்றைய தியானம்(Tamil) 29-08-2022 (Youth Special)
வசனம் கிடைக்காத பஞ்சம்
“...கர்த்தருடைய வசனம் கேட்கக் கிடையாத பஞ்சத்தை அனுப்புவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்கிறார்.” – ஆமோஸ் 8:11
உணவுப் பற்றாக்குறைகளும், தண்ணீர்ப் பற்றாக்குறைகளும் பல தேசங்களில் வந்ததை நாம் அறிவோம். ஆனால் ஆமோஸ் தீர்க்கதரிசியின் மூலம் வசனம் கேட்கக் கிடைக்காத பஞ்சம் வரப்போகிறது என்று எச்சரிக்கிறார்.
உணவுத் தட்டுப்பாடுகள் வருமானால் அது நம் சரீரத்தை மட்டும் பாதிக்கும். ஆனால் வசனம் கேட்பதற்குக் கிடைக்காமல் போகும்போது உள்ளான மனுஷன் பலவீனப்பட்டு போவது மட்டுமல்லாமல் கடைசியில் நித்தியத்தையும் இழந்துவிடுவான்.
ஆகையால் தான் ஆண்டவர் இயேசு தனது பிரசங்கத்தில் “மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகின்ற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்” என்றார் (மத். 4:4). “உம்முடைய வார்த்தைகள் கிடைத்தவுடன் அவைகளை உட்கொண்டேன். உம்முடைய வார்த்தைகள் எனக்குச் சந்தோஷமும் என் இருதயத்துக்கு மகிழ்ச்சியுமாய் இருந்தது” என்று எரேமியா தீர்க்கதரிசி வசனத்தை ஆகாரத்தைப் போல புசித்தேன் என்று கூறுகிறார். ஒருவேளை மழையின்மையினாலோ மற்றும் யுத்தங்கள் நிமித்தமோ உணவுப்பஞ்சங்கள் வரலாம். ஆனால் வசனம் கேட்கக் கிடைக்காத பஞ்சகாலம் மிக ஆபத்தானது.
கடந்த வருடங்களில் கொரோனா தொற்று நோயினால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆலயங்கள் திறக்கப்படாததால் வசனத்திற்கு பஞ்சம் வந்துவிட்டதோ? என்று கூட நாம் நினைத்திருக்கலாம். சமூக வலைதளம் ஊடகங்கள் மூலம் வசனம் கேட்கக் கர்த்தர் கிருபை செய்தார் அல்லவா? ஆனால், இப்படிக் கூட வசனம் கிடைக்காத கொடிய நாட்கள் வரப்போகிறது.
அன்பான வாலிபர்களே, கர்த்தருடைய வசனத்தைக் கேட்பதிலும் அதை அனுதினமும் நம் வாழ்க்கையில் அப்பியாசிப்பதிலும் நாம் பழகுவோமானால் எவ்விதப் பஞ்சத்தையும் எதிர்கொள்ளலாம். கர்த்தருடைய வார்த்தையை தியானிக்க விடாமல் அதின் ஆசீர்வாதத்தை சுதந்தரிக்க விடாமல் ஜெபம் என்கிற கர்த்தருக்கும் நமக்கும் இருக்கும் உறவிலே நம்மை வாழவிடாமல், நம்மையும் நம்மைச் சுற்றிலும் இருக்கிறவர்களையும் சீர்குலைக்கச் செய்கிற பொல்லாங்கனிடமிருந்து நாம் பாதுகாக்கப்பட நம் இருதயத்தை கர்த்தருடைய வார்த்தையினால் நிறையச் செய்வோமா? நம் பிள்ளைகளுடைய இருதயத்தை வசனத்தால் நிறைத்து அவர்கள் ஆத்துமாவை செழிக்கச் செய்வோமா?
கிறிஸ்துவுக்குள் சீஷர்களை உருவாக்குவோம்!
சமுதாய சீர்கேட்டிலிருந்து நம் தேசத்தைக் காப்போம் – அல்லேலூயா!
- Bro.பால் ஜெபஸ்டின் ராஜ்
ஜெபக்குறிப்பு:
கெத்செமனே வளாகத்தில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் கட்டுமானப் பணிகளின் தேவைகள் சந்திக்கப்பட, நேர்த்தியாய் துரிதமாய் நடைபெற ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250