By Village Missionary Movement
Monday, 17-Oct-2022இன்றைய தியானம்(Tamil) 17-10-2022 (Youth Special)
கண்மணியே கேள்
“பாவத்திற்கு விரோதமாய்ப் போராடுகிறதில் இரத்தஞ்சிந்தப்படத்தக்கதாக நீங்கள் இன்னும் எதிர்த்துநிற்கவில்லையே” – எபிரெயர் 12:4
நம்முடைய வாழ்க்கையில் பரிசுத்தமாய் வாழாமல், நாம் பாவம் செய்வதினால் தேவனிடமிருந்து இழக்கக்கூடிய நான்கு காரியங்களைத் தியானிப்போம்.
தேவப்பிரசன்னம்: கிறிஸ்துவை உடையவர்களுடைய வாழ்வில் மிக முக்கியமான ஒன்று தேவ பிரசன்னம். ஆனால் நாம் துணிகரமாக பாவம் செய்யும்பொழுது தேவ பிரசன்னத்தை இழந்து விடுகிறோம். கிரமமாக வேதத்தை தியானிக்கவோ, ஜெபிக்கவோ நம்மால் இயலாததால் ஆவிக்குரிய வாழ்வில் பின்மாற்றத்தை அடைந்து, அவிசுவாசியாய் மாறிவிடும் அபாயமும் உண்டு.
நம்பிக்கை: யாக்கோபு 1:14 -ல் அவனவன் தன் தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான் என்று வாசிக்கின்றோம். நாம் பாவம் செய்வதினால் சாத்தானின் வலையில் விழுந்து சோதனைகளை வருவித்துக் கொள்கிறோம். இந்த சோதனை நேரத்தில் ஆண்டவர் மேல் வைத்திருக்கிற நம்பிக்கை குறைந்து விடும்.
சமாதானம்: கர்த்தர் கொடுக்கும் சமாதானம் நமக்குள்ளிருந்தால் மாத்திரமே நாமும் நம்மை சுற்றியுள்ளவர்களும் சந்தோஷமாய் வாழ முடியும். பாவம் செய்து தேவ சமாதானத்தை இழக்கும்போது மனக்குழப்பங்கள் நமக்குள்ளே ஏற்பட்டு வாழ்வில் மகிழ்ச்சியற்ற நிலை உண்டாகிறது.
ஆசீர்வாதங்கள்: நாம் பாவமான வாழ்க்கை வாழ்ந்து தேவனைத் துக்கப்படுத்தும்போது, அவர் நமக்காக வைத்திருக்கிற ஆசீர்வாதத்தை சுதந்தரிப்பதற்கு அது தடையாக மாறும். ஆண்டவர் நமக்கென்று குறித்ததான திட்டங்கள் நிறைவேறத் தாமதித்துக் கொண்டே போகும்.
பிரியமான கண்மணிப்பிள்ளைகளே! பரிசுத்த வேதாகமத்தில் சிம்சோன், யோசேப்பு என்ற இரண்டு வாலிபர்களின் வாழ்க்கையைக் குறித்து நாம் தியானிப்போமென்றால் இருவருமே தேவனுக்காக செயல்பட முன்குறிக்கப்பட்ட, தெரிந்தெடுக்கப்பட்ட பாத்திரங்கள். யோசேப்பு என்ற வாலிபன் பாவத்திற்கு எதிர்த்து நின்று போராடி ஆண்டவர் வைத்திருந்த ஆசீர்வாதமான வாழ்வைப் பெற்றுக் கொண்டான். ஆனால் சிம்சோன் என்ற வாலிபனோ பாவத்திலே விழுந்து உணர்வில்லாதவனாய், எதிர்த்து நிற்க போராட மனமில்லாதவனாய் தேவப்பிரசன்னத்தை இழந்து அநேகருக்கு கேலிப் பொருளாகி ஆண்டவர் அவனுக்காக வைத்திருந்த ஆசீர்வாதத்தை இழந்தவனாய் மடிந்துபோனான்.
நாம் சுயபெலத்தினால் மாத்திரம் பாவத்தை ஜெயிக்க முடியாது. மாம்ச பிரகாரமாக நாம் முயற்சி செய்யும்பொழுது திரும்பவும் அதே பாவத்தில் விழுந்துவிட வாய்ப்புகள் உண்டு. இயேசுகிறிஸ்துவின் இரத்தம் மாத்திரமே சகல பாவங்களையும் நீக்கி, நம்மை சுத்திகரிக்கும். பாவத்தை ஜெயிக்கிற பெலனையும், பரிசுத்த ஆவியின் நிறைவையும் நமக்கு ஆண்டவர் தருவார். ஆவியானவரின் துணையோடு பாவத்திற்கு விரோதமாக எதிர்த்துநின்று போராடி பரிசுத்த வாழ்க்கை வாழ்ந்து ஜெயம் பெறுவோம்! அல்லேலூயா!
- Mrs. ஜெபக்கனி சேகர்
ஜெபக்குறிப்பு:
மாதந்தோறும் நாம் சுமார் 47,000 -க்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு இயேசுவின் அன்பை அறிவிக்கிறோம். வசனத்தைக் கேட்கும் சிறுவர்கள்-சிறுமியர் ஆண்டவரின் அன்பை உணர, அதில் வளர ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250