By Village Missionary Movement
Monday, 27-Mar-2023இன்றைய தியானம்(Tamil) 27-03.2023
கிறிஸ்துவின் கரம்
‘’என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாதது...’’ - யோவான் 15:4
ஒரு ஏழை சிறுவன் ஒரு சாக்லேட் கடையின் முன்னால் நின்று கொண்டு உள்ளே போவோரையும் வெளியே வருவோரையும் பார்த்துக்கொண்டிருந்தான். அதனைக் கவனித்த கடைக்காரர் அவன் மேல் இரக்கப்பட்டு ‘’உனக்கு என்ன வேண்டும்’’ என்று கேட்டார். அவனோ மாறுத்தரம் ஒன்றும் சொல்லவில்லை. கடைக்காரர் உடனே உள்ளே போய் ஒரு சாக்லேட் பாட்டிலை எடுத்து வந்து, அவனிடம் நீட்டி, உனக்கு வேண்டியதை எடுத்துக்கொள் என்று கூறினார்.
ஆனால் அந்த சிறுவனோ கடைக்காரரையே பார்த்துக் கொண்டு நின்றான். “ஏன் இப்படிப் பார்க்கிறாய் சாக்லேட் வேண்டாமா?” என்றார். அதற்கு அந்த சிறுவன் ‘’என்னுடைய கை சிறிய கை! நான் எடுத்தால் கொஞ்சம்தான் வரும். ஆனால் உங்களுடைய கையோ பெரிய கை. நீங்கள் எடுத்துக் கொடுத்தால் அதிகம் கிடைக்கும். அதனால் நீங்களே எடுத்துக் கொடுங்கள்’’ என்றானாம்.
ஆம், அன்பானவர்களே! நாம் நம்முடைய சுய பிரயாசத்தினால் சாதிக்கும்போது கிடைக்கும் வெற்றியை விட, தேவனுடைய கரத்தை சார்ந்து அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளும் வெற்றி அதிக மேன்மையாயிருக்கும். நம்முடைய ஒவ்வொரு செயலிலும் கிறிஸ்துவை முன்னிறுத்தி செயல்பட்டால் வெற்றி
நமக்கே!
வேதத்தில் கூட கிதியோன் என்பவரை நாம் பார்த்தோமானால் இவர் விசுவாச வீரர்களின் பட்டியலில் இடம் பெற்றவர். (எபிரெயர்;11:32-33). இஸ்ரவேலை 40 வருடங்களாக நியாயம் விசாரித்தவர். இவர் மீதியானியருக்கு எதிராக, கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து 300 பேருடன் சென்றார். கையில் பட்டயம் எடுக்காமல் தீவட்டிகளையும், பானைகளையும், எக்காளங்களையும் ஏந்தி 300 பேருடன் பெரிய படையை விசுவாசத்துடன் எதிர்த்து வெற்றி கண்டவர். ஆம் 1கொரி. 1.27-ல் பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்து கொண்டார் என்று பார்க்கிறோம். இன்று நாமும் கூட கர்த்தருடைய கரத்தில் நம்மை ஒப்புக்கொடுத்து அவரை சார்ந்து அவருக்குக் கீழ்ப்படிந்து வாழ்ந்தால் தேவன் நம்மை அவருடைய சித்தத்தின் படி உயர்த்துவார். தேவன் யாரையும் தள்ளிவிடுகிறவர் அல்ல. நாம் எல்லோரும் அவர் இரத்தத்தால் கழுவப்பட்டிருக்கிறோம். அவருடைய பிள்ளைகளாகிய நாம் அவருடைய பலத்த கரத்தில் அடங்கியிருந்து ஜெயம் பெறுவோம். ஆமென்!
- Mrs. திவ்யா அலெக்ஸ்
ஜெபக்குறிப்பு:
பிலிப் காஸ்பல் டீம் ஊழியத்தின் மூலம் புதிதாக சந்திக்கப்படும் கிராமங்களில் தேவன் எழுப்புதலைக் கட்டளையிட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864