By Village Missionary Movement
Saturday, 13-May-2023இன்றைய தியானம்(Tamil) 13-05.2023
ஜெபமும்,செயலும்
“...கிரியைகளில்லாதவனானால்... அந்த விசுவாசம் அவனை இரட்சிக்குமா?” - யாக்கோபு 2:14
குமார் ஒரு தீவிரமான கடவுள் பக்தன். அவனுக்கு ஹாக்கி விளையாட்டு என்றால் மிகவும் பிரியம். ஆகவே எப்படியாவது தான் ஹாக்கியில் சாம்பியன் ஆக வேண்டும் என்பதுதான் அவனது உயிர்மூச்சாக இருந்தது. ஒவ்வொரு நாளும் கடவுளே என்னை சேம்பியனாக்கி விடும் என்று பிரார்த்தனை செய்வான். தினமும் எதைச் செய்ய மறந்தாலும் இந்த பிரார்த்தனை செய்ய மறக்க மாட்டான். ஒருநாள் அவன், கடவுளே! நான் சிறுவயதிலிருந்தே எத்தனை நாளாய் என்னை ஹாக்கியில் வல்லவனாக்கும் என்று வேண்டியிருக்கிறேன். எனக்காக ஏதாவது செய்திருக்கிறீரா? என்று கேட்டான். உடனே கடவுள் எனக்கும் உன்னை சேம்பியனாக மாற்ற ஆசைதான். ஆனால் நீ மைதானத்திற்கு சென்று விளையாடினால் அல்லவா உன்னை சேம்பியனாக மாற்ற முடியும். நீ வீட்டிலேயே இருந்து கொண்டு, தொலைக்காட்சியில் ஹாக்கி விளையாட்டைப் பார்த்துக் கொண்டு இருந்தாயானால், உன் விருப்பத்தை நான் எப்படி நிறைவேற்ற முடியும்? என்றாராம். இன்றும் நம்மில் அநேகர் இந்த வாலிபனைப் போலத்தான் இருக்கிறோம்.
இதை பருவவாரியாகப் பார்ப்போமானால், பள்ளிப் பருவத்தில் மாணவர்கள் முயற்சி எடுத்துப் படிக்காமல் விளையாட்டுத்தனமாக இருந்துவிட்டு பரீட்சை நேரத்தில் பயங்கரமாக தேவனைத் தேடுவார்கள். ஆண்டவர் அவர்களுக்காக எதையாவது செய்ய முடியுமா? கல்லூரி பருவத்திலே இப்பொழுது வாழ்வை என்ஜாய் பண்ணிக் கொள்வோம் என்று சொல்லி போன், இன்டர்நெட், கிளப் என்று நாட்களையும், நேரத்தையும் வீணடித்துவிட்டு பரீட்சை நாட்கள் வந்தவுடன், பாட்டி எனக்காக ஜெபியுங்கள் என்று கூறிவிட்டு புக்கை திறந்தால் அனைத்தும் புதிதாகத் தோன்றி கண்ணைக்கட்டி காட்டில் விட்டது போல காணப்படும். அன்று கண்ணீர் விட்டாலும் பிரயோஜனமுண்டோ?
நம்மில் சிலர் வேதத்தை வாசிப்பதே கிடையாது. ஆனால் ஆண்டவரே வேதத்தின் மறைபொருளை எனக்குக் காண்பியும். அந்தரங்கத்தில் இருக்கிற பொக்கிஷத்தை எனக்கு காட்டும், யாருக்கும் வேதத்தில் எந்த சந்தேகம் வந்தாலும் உடனே பதில் கூறும் வேத வல்லுனராக என்னை மாற்றும் என்று ஜெபிக்கிறோம். ஆண்டவர் அதற்கு என்ன பதில் கூறுவார்? முதலில் நீ வேதத்தை தினமும் கிரமமாய் ஜெபத்தோடும், வாஞ்சையோடும் வாசி, பின் நான் உனக்கு மறைபொருளை வெளிப்படுத்துகிறேன் என்பார்.
பிரியமானவர்களே! நமது ஆவிக்குரிய வாழ்வில், அபிஷேகத்தைப் பெற வேண்டும், பரிசுத்தமாய் வாழ வேண்டும், தேவனை தரிசிக்க வேண்டும் என்றெல்லாம் ஆசைப்படுகிறோம். ஆனால் அதற்காக பிரயாசப்பட்டு, காத்திருந்து ஜெபித்திருக்கிறோமா? கிரியையில்லாத விசுவாசம் செத்ததாயிருக்கிறது போல விசுவாசமில்லாத கிரியையும் வீணாயிருக்கிறது.
- Mrs. நந்தினி செல்வின்
ஜெபக்குறிப்பு:
ஆமென் வில்லேஜ் டிவியின் நிகழ்ச்சிகளில் பங்குபெறும் வாலிபர்கள் மற்றும் சிறுவர்கள் ஒவ்வொருவரையும் தேவன் பயன்படுத்த ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864