By Village Missionary Movement
Sunday, 12-Nov-2023இன்றைய தியானம்(Tamil) 12.11.2023
வனாந்திரத்தில் வழி
"…நான் வனாந்திரத்திலே வழியையும், அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன்" - ஏசாயா 43:19
ஹிமாலாயாவில் டீக்கடை நடத்தி வந்த ஒரு முதியவரும் அவர் மகனும் வறுமையில் வாழ்ந்தனர். ஒருமுறை மிகவும் குளிராக இருந்ததால் சீக்கிரமாக கடையை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்று விட்டார்கள். அவர்கள் இருந்த ஊரில் தீவிரவாதிகள் கலவரம் செய்து ஒவ்வொரு வீட்டையும் தாக்கும் போது பெரியவரின் மகனுடைய மண்டையும் உடைந்து விட்டது. மகனை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்ல பணம் தேவைப்பட்டது. வீட்டில் பணம் இல்லை. ஊரிலுள்ள அனைவரும் ஏழ்மையானவர்கள்; எல்லாருமே தீவிரவாதிகளால் இழப்புகளை சந்தித்தவர்கள். கடையில் ஏதாவது பணம் இருக்குமா என பார்க்க சென்றார். கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. சீனி டப்பாவுக்கு அடியில் 1000 ரூபாய் தெரியும்படி இருந்தது. இவர் என் தேவை அறிந்து நான் வணங்கும் இயேசு கிறிஸ்துதான் வைத்து சென்றுள்ளார் என்று நினைத்து அவரைத் துதித்துக் கொண்டே மகனை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்ல புறப்பட்டார்.
இந்த பணத்தை வைத்துச் சென்றது ஒரு படையின் மேஜர் ஆவார். படையின் மேஜர் தன் படைவீரருடன் செல்லும்போது படைவீரர்கள் டீ குடிக்க ஆசைப்பட்டார்கள். ஆனால் டீ கடை மூடப்பட்டிருந்தது. படைவீரர்கள் டீ கடை பூட்டை உடைத்துவிட்டு அவர்களே டீ போட்டு குடித்தார்கள். மேஜர் டீ கடைக்காரருக்கு 1000 ரூபாயை சீனி டப்பாவின் கீழ் வைத்து விட்டு சென்றார். இந்த பணம் தான் டீ கடை பெரியவர் மகனின் காயத்தை ஆற்றியது. போர் வீரர்கள் தங்களின் பணியை முடித்து திரும்பும் போது டீ கடை பெரியவரை சந்தித்து எப்படி இந்த கடை மூலம் வாழ்கிறீர் என்று கேட்ட போது, என்னை இயேசு வாழ வைக்கிறார் என்று கூறி நடந்த சம்பவத்தை எடுத்துக் கூறியுள்ளார். உடனே மேஜர் கூறினார், "பெரியவரே, உம்முடைய ஆண்டவர் உண்மையிலே பெரியவர். அவரே எங்கள் மூலம் உமக்கு உதவினார்" என்று கூறினார்.
ஆம், நம் தேவன் ஆச்சரியமாய் வழி திறப்பவர். ஆகார், வனாந்திரத்திலே தண்ணீரில்லாமல் பிள்ளை மடியும் நிலையில் இருப்பதைக் கண்டு அழுவதை பார்த்ததும் ஊற்றைக் காட்டுகிறார். சிம்சோன் விடாய்த்து தண்ணீருக்காக கர்த்தரிடம் வேண்டிய போது ஊற்றை உண்டாக்குகிறார். இஸ்ரவேல் ஜனங்களுக்காக கன்மலையிலிருந்து தண்ணீரை வர வைக்கிறார்.
பிரியமானவர்களே, அதே போல் வனாந்திரமான சூழலில் யாரும் உதவி செய்ய முடியாத நிலையில் தனிமையில் தவித்து நிற்கிறீர்களா? உங்களுக்காக தேவன் ஊற்றை பிறப்பிக்கச் செய்ய வல்லவர். யாரிடமிருந்தும் உதவி கிடைக்கச் செய்ய வல்லவர். அவரை மட்டும் எல்லா வேளையிலும் நோக்கிப் பாருங்கள். உதவி கிடைக்கும், தேவைகள் சந்திக்கப்படும், ஆசீர்வாதமான வாழ்வு கிட்டும்.
- Mr. சாமுவேல் மோரிஸ்
ஜெபக்குறிப்பு:
வாலிபர் மாலை ஜெபக்குழு மூலம் சந்திக்கப்படும் வாலிபர்களுக்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864