By Village Missionary Movement
Thursday, 04-Jan-2024இன்றைய தியானம்(Tamil) 04.01.2024
மன்னியுங்கள்
"ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்." - எபே.4:32
ஹேரி என்பவர் 15 வயதாக இருக்கும் பொழுது நடந்த ஒரு சம்பவத்தை இங்கே எழுதுகிறார். ஞாயிறு ஆராதனை முடிந்து வீடு திரும்பும் பொழுது காரை ஓட்டும்படி என் தகப்பனாரிடம் அனுமதி கேட்டேன். அவரும் காரை கொடுத்தார். துரதிர்ஷ்டவசமாக ஒரு திருப்பத்தில் கட்டுப்பாட்டை இழந்ததால் காரை ஒரு விளக்கு கம்பத்தின் மேல் மோதி விட்டேன். இதனால் எங்கள் காருக்கு 1000 டாலர் மதிப்பிற்கான பாதிப்பு ஏற்பட்டது. நான் மிகவும் பயந்து வெட்கப்பட்டேன். ரேடியேட்டரில் இருந்து உஸ் என்ற ஒலியுடன் தண்ணீர் ஆவியாக வெளிவந்தது. எனது தகப்பனார் என்னிடம் திரும்பி "பரவாயில்லை, சரி, நான் உன்னை மன்னிக்கிறேன்" என்று கூறினார். எங்களது காரை பழுது பார்க்க என்னுடைய தகப்பனாருக்கு அதிகமான பணம் செலவானாலும் என்னுடைய தகப்பனார் என்னுடைய வாழ்க்கையில் பின் ஒரு பொழுதும் கூட அந்த நிகழ்ச்சி பற்றி கூறினதே கிடையாது. கார் ஓட்டுநருக்கான உரிமத்தை நான் பெற்ற பின் எங்களது காரை ஓட்டுவதற்கு என்னுடைய தகப்பனார் மகிழ்ச்சியுடன் அனுமதி தந்தார். பண்பு நிறைந்த நல்ல ஒரு தகப்பன் மூலம் தவறு செய்த மகனுக்கு மன்னிப்பின் மகத்துவம் அனுபவிக்க கிடைத்தது. இந்த ஹேரி என்பவர் அமெரிக்க கிறிஸ்தவ உலகில் பிரபலமான எழுத்தாளர் ஆவார்.
கிறிஸ்துவில் பிரியமானவர்களே! இன்றைய வேத வசனத்தில் கிறிஸ்து உங்களுக்கு மன்னித்தது போல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள் என்று வாசிக்கின்றோம். நம்முடைய வாழ்வில் குறுக்கிட்டவர்களையும், தீங்கிழைத்தவர்களையும் மன்னிப்பது என்பது இயல்பான விஷயம் அல்ல. கசப்பு, மூர்க்கம், பழிவாங்கும் வெறி இவைகள்தான் ஒரு மனிதனுடைய இருதயத்தை நிரப்பிக் கொண்டிருக்கின்றன. இவைகள் மத்தியில் பிறரை மன்னிப்பது என்பது நமக்கு சாத்தியமற்றதாக காணப்படலாம். கிறிஸ்துவுக்குள் நல்ல முதிர்ச்சியும், வேத வசனத்தின் வெளிச்சமும் இருந்தால் மட்டுமே நாம் பிறரை ஏற்றுக்கொள்ள முடியும். தேவனை உண்மையாய் பின்பற்றுகிறவர்கள் மாம்சத்திற்குரிய கனிகளால் நிரம்பி இருக்க முடியாது. மன்னிப்பு என்பது தெய்வீக சுபாவம். இதைப் பெற்றுக் கொள்வதற்கு இருதயத்தில் சற்று கடின பிரயாசம் தேவை. பிறரை மன்னிக்க வேண்டும் என்கிற விதையை விதைத்துக் கொண்டே இருங்கள். நீங்களும் மன்னிக்கப்படுவீர்கள்.
- Bro. ஜேக்கப் சங்கர்
ஜெபக்குறிப்பு:
பத்தாயிரம் கிராமங்களுக்கு சுவிசேஷம் அறிவிக்கும் திட்டத்தில் சந்திக்கப்பட்ட கிராமங்களில் தொடர்ந்து பணி செய்யும் தெபோராள்கள் எழும்ப ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864