By Village Missionary Movement
Friday, 26-Jan-2024இன்றைய தியானம்(Tamil) 26.01.2024
எச்சரிக்கை புறக்கணிக்கப்படும்போது…
"…தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன்" - 1 கொரி. 10:12
திடீரென்று ஒரு பயங்கரமான வெடிச் சத்தம் அந்த கப்பலில் கேட்டது. அதன் அடித்தட்டில் பொறியாளர்களும், பணியாளர்களும் தங்களது வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையில் தண்ணீர் பெருக்கெடுத்து அறைக்குள் நுழைந்தபடியால் கப்பலின் இயந்திர கொதிகலன் வெடித்ததுதான் இந்த பெருஞ்சத்தத்திற்கு காரணம். ஐயோ இது மரணத்தின் அறிகுறியல்லவா என எண்ணி அதிர்ச்சியடைந்தனர் பொறியாளர்கள். டைட்டானிக் என்ற அந்த பிரமாண்ட கப்பல் இரண்டாக உடைந்து இருண்ட கடல் தண்ணீருக்குள் மெல்ல மெல்ல மூழ்கி மறைந்தது. கடல்வழிப் பயணச் சரித்திரத்தில் இது ஒரு மிகப்பெரிய துக்ககரமான சம்பவமாகும்.
அந்த இருண்ட இரவில், பனிக்கட்டி மூடிய கடல் நீரில், மரணத்தோடு போராடிக்கொண்டிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் எழுப்பியிருக்கும் கூக்குரலை நாம் இன்று நினைத்தாலும் ஒரு நிமிடம் நம்மை செயலற்றவர்களாக்கி விடுகிறது. மிக உறுதியாக, நேர்த்தியாக அமைக்கப்பட்டு, மூழ்க முடியாத கப்பல் என்று அறிவிக்கப்பட்ட இந்த டைட்டானிக் தன் முதல் பிரயாணத்திலேயே மூழ்கிவிட்டதே! இதற்கு காரணம் என்னவென்று ஆராய்ந்தபோது ஒரு காரியத்தை தெளிவாய் புரிந்துகொண்டனர். அதென்னவென்றால், டைட்டானிக்கிற்கு முன்பாக பயணம் செய்துகொண்டிருந்த கலிபோர்னியன் என்ற கப்பல், அருகாமையில் பனிக்கட்டிகள் காணப்படுவதாக தகவல் அளித்தது. அடுத்து தட்பவெப்ப நிலையை காட்டும் கருவியும் குறைந்த தட்பவெப்ப நிலையைக் காட்டி எச்சரித்தது. ஆனால் எச்சரிக்கை புறக்கணிக்கப்பட்டது. மூழ்க முடியாத பிரமாண்டமான கப்பல் என்று அறிவிக்கப்பட்ட டைட்டானிக் ஆபத்து நிறைந்த பகுதியில், நள்ளிரவில் முழுவேகத்துடன் செலுத்தப்பட்டது. அந்தோ பரிதாபம்!
நமது அந்தரங்கமான, வெளியரங்கமான பாவத்தின் விளைவைக் குறித்து தேவன் நம்மை ஒரு முறையல்ல! இருமுறையல்ல! பலமுறை எச்சரிக்கிறார். ஆனால் நமக்கோ மிகுந்த மனதைரியம், நிர்விசாரம்! தேவனிடமிருந்து வரும் எச்சரிக்கைகளை புறக்கணித்துக் கொண்டேயிருக்கிறோம். "என் வாழ்க்கைப் பாதை சரியானதுதான் இந்த பாவமெல்லாம் என்னிடமில்லை. இந்தசெய்தி எனக்குரியதல்ல" என எண்ணுகிறோம். "நான் பரம்பரையாய் கிறிஸ்தவன், நான் இரண்டாம் வருகையில் கைவிடப்பட்டு போய்விடுவேனோ? நடக்கவே நடக்காது" என்று நம்மைக் குறித்து எண்ணுவதற்கு மிஞ்சி எண்ணுகிறோம்.
பிரியமானவர்களே! மரணமும், நியாயத்தீர்ப்பும், நமக்கு முன்பாக காத்துக்கொண்டிருக்கிறது என்றாலும், நாம் முழுவேகத்துடன் நம்மைத்தேடி வரும் எச்சரிப்புகளையும் புறக்கணித்துவிட்டு துணிச்சலுடன் முன்னேறுகிறோம். ஒன்றை நினைவிற்கொள்வோம். மரணம் பட்சபாதமற்றது. ஆகவே நமது சுயபலத்தை நம்பாமல் தேவகிருபையை சார்ந்து நிற்போம். நம்மை தாழ்த்தி, தேவனுடைய வழிநடத்துதலுக்கு செவிசாய்க்க தீர்மானிப்போம். அகந்தையாய் நடந்து அழிவை சந்திக்காமல் இருக்க ஜாக்கிரதையாயிருப்போம்.
- Mrs. ஜெபா டேவிட்கணேசன்
ஜெபக்குறிப்பு:
இந்த புதிய வருடத்தில் 38 மாவட்டங்களிலும் வாலிபர் முகாம் நடத்தப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864