By Village Missionary Movement
Saturday, 08-Jun-2024இன்றைய தியானம்(Tamil) 08.06.2024
சர்வ வல்லமையுள்ள தேவன்
"தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்” - யோபு 42:2
அது ஒரு சிறிய கிராமம். அந்த ஊரின் ரோட்டின் அருகே காய்ந்து போன நிலையில் ஒரு மரம் இருந்தது. வாலிபப் பெண் ஒருத்தி அந்த வழியே தினமும் நடந்து செல்வது வழக்கம். ஒருநாள் அந்தப் பெண் காய்ந்து போன மரத்தைப் பார்த்து, "நீயும் நானும் நண்பர்கள், ஏனெனில் உன்னாலும் யாருக்கும் பிரயோஜனமில்லை, படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கிற என்னாலும் யாருக்கும் எந்தவித பிரயோஜனமுமில்லை, எனவே நீயும் நானும் ஒரே கூட்டம்" என்றாள். மாதங்கள் கடந்தன. அந்த வழியே வந்த வாலிபப் பெண்ணுக்கு மிகுந்த ஆச்சரியம். காய்ந்து போயிருந்த அந்த மரம் அழகாக துளிர்க்க ஆரம்பித்திருந்தது! இதைப் பார்த்த அந்தப் பெண் சந்தோஷப்பட்டாள். உடனே, "ஆண்டவரே, காய்ந்து போயிருந்த இந்த மரத்தை உம்மால் இவ்வளவு அழகாகத் துளிர்க்கச் செய்ய முடியுமானால் என் வாழ்வையும் துளிர்க்கச் செய்ய உம்மால் ஆகுமென்று விசுவாசிக்கிறேன்" என்று தன் உள்ளத்தின் ஆழத்திலிருந்து உண்மையாய் ஜெபம் செய்தாள். இயேசப்பா அவளுடைய ஜெபத்தைக் கேட்டு ஒரு ஊழியக்காரியாக மாற்றி அநேகருக்கு பிரயோஜனமாகப் பயன்படுத்தி வருகிறார்.
வேதத்திலே மார்த்தாள், மரியாள் என்பவர்களுடைய சகோதரன் மரித்துப் போய்விட்டார். குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் எல்லாம் முடிந்து விட்டது அவ்வளவுதான் என்று நினைத்திருந்தார்கள். அழுது கொண்டிருந்த அவர்களிடத்தில் இயேசு வந்தார். மரணமடைந்த லாசருவுக்கு ஜீவன் தந்தார். நம்பிக்கையை இழந்து வெறுமையாய் காணப்பட்ட லாசருவின் சகோதரிகளின் வாழ்வும் துளிர்த்தது.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, உங்களின் வாழ்விலும் நினைத்தது நடக்கவில்லை, என்னுடைய பெலவீனம் மாறவில்லை, என் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் இல்லை, என் படிப்பிற்கேற்ற வேலையில்லை என்று "இல்லை, இல்லை" என்று புலம்பிக் கொண்டிருக்கிறீர்களா? கவலைப்படாதிருங்கள். பட்டுப் போன மரத்தைத் துளிர்க்கச் செய்யும் தேவனால் உங்கள் வாழ்வையும் துளிர்க்கச் செய்ய முடியும். உங்கள் சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிர்க்கும். துளிர்ப்பது மாத்திரமல்ல கனி கொடுத்து மற்றவர்களுக்கும் ஆசீர்வாதமானவர்களாய் மாறுவீர்கள். அவரை நம்புகிற அனைவருடைய வாழ்விலும் சகலத்தையும் நம் ஆண்டவர் செய்ய வல்லவர். நாம் அவருடைய கரத்தில் இருக்கிறோம். கவலைப்படாதிருங்கள், சர்வ வல்லமையுள்ள தேவன் நேர்த்தியாய் நம்மை நடத்துவார். விசுவாசியுங்கள், அற்புதங்களைக் காண்பீர்கள்.
- Mrs. அனிதா அழகர்சாமி
ஜெபக்குறிப்பு:
CCC (Child Care Child) திட்டத்தில் இணைந்துள்ள சிறுவர்களின் படிப்பிற்காக, பாதுகாப்பிற்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864